புதுவை அமைச்சர்களின் அலுவலகச் செலவு: ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு

விதிகளை மீறி தங்களது அலுவலகங்களுக்கு செலவு செய்த புகார் தொடர்பாக, புதுவை மாநில அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
புதுவை அமைச்சர்களின் அலுவலகச் செலவு: ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு


விதிகளை மீறி தங்களது அலுவலகங்களுக்கு செலவு செய்த புகார் தொடர்பாக, புதுவை மாநில அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
புதுவையில் முதல்வர், பேரவைத் தலைவர், அமைச்சர்களுக்கு சட்டப் பேரவை வளாகத்தில் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. சட்டப் பேரவை வளாக அலுவலகங்களில் விருந்தினர்களை உபசரிப்பது, நினைவுப் பரிசு வழங்குவது, சந்திக்க வரும் பொதுமக்களுக்கு தேநீர், சிற்றுண்டி, மதிய உணவு வழங்குவது, அலுவலகத்துக்குத் தேவையான எழுதுபொருள்கள் ஆகியவற்றுக்கான செலவினங்களை பேரவைச் செயலகம் வழங்குகிறது.
இருப்பினும், அமைச்சர்கள் தங்களது அவசரத் தேவைக்காகவோ அல்லது கூடுதல் தேவைக்காகவோ தங்களின் துறை சார்ந்த பொதுத் துறை நிறுவனம், வாரியம், கழகங்களில் இருந்து அலுவலகங்களுக்கு பொருள்களைப் பெறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜகான் துறையின் கீழ், புதுவை தொழில் முதலீட்டு வளர்ச்சிக் கழகம் (பிப்டிக்) உள்ளது. இவர், தனது அலுவலகத் தேவைக்காக பிப்டிக் மூலம் வலைதள வசதி, எழுதுபொருள், இருக்கை வசதி, மின் அடுப்பு, தூசியை சுத்தப்படுத்தும் இயந்திரம் உள்ளிட்டவற்றை ரூ.3 லட்சத்து 16 ஆயிரத்துக்கு பெற்றுள்ளதாக, ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெற்று, ஆளுநர் கிரண் பேடியிடம் புகார் அளித்தது.
இதேபோல, சமூக நலத் துறை அமைச்சர், கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை 4 மாதங்களில் தேநீர் வாங்க அந்தத் துறையின் கீழுள்ள பொதுத் துறை நிறுவனத்தில் இருந்து 15,980 ரூபாயை எடுத்து செலவு செய்திருப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பிற அமைச்சர்களின் அலுவலகங்கள் சரியான பதிலைத் தெரிவிக்கவில்லை என்றும், வழக்கமாக இந்தச் செலவினங்களை அமைச்சரவைச் செயலகங்கள் மேற்கொள்ளும் நிலையில், ஏன் அரசுத் துறை நிறுவனங்களிடம் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநரிடம் அளிக்கப்பட்ட புகாரில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இந்தப் புகார் தொடர்பாக ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு ஆளுநர் கிரண் பேடி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். இதுகுறித்து ஆளுநர் தனது கட்செவிஅஞ்சல் மூலம் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
சட்ட விதிகளை யார் மீறினாலும், அதற்கான பதிலைக் கூற அவர்கள் பொறுப்புடையவர்கள். கிடைத்த தகவல்களை வைத்து ஊழல் தடுப்புப் பிரிவின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
சட்ட விதிகளை மீறி உதவி புரிந்தவர்களும், இதற்கு நிச்சயம் பதில் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஆளுநர் கிரண் பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக கெடுபிடிப்போர் நீடித்து வருகிறது. யாருக்கு அதிகாரம் என்ற வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்பு விசாரணைக்கு ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டிருப்பது அமைச்சரவை - ஆளுநர் இடையிலான மோதலை மேலும் அதிகரித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com