ராஜஸ்தானில் பரிதாபம்: ஐந்து மகள்களுடன் தற்கொலை செய்து கொண்ட தாய்! 

ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், மகன் இல்லாத ஏக்கத்தில், தனது ஐந்து மகள்களுடன் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.


ஜெய்ப்பூர்: ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், மகன் இல்லாத ஏக்கத்தில், தனது ஐந்து மகள்களுடன் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

ராஜஸ்தான் மாநிலம் பார்மெர் மாவட்டம் பவாடி கலா கிராமத்தில் புதன்கிழமை மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

அரசுப் பள்ளி ஆசிரியையாக இருப்பவர் ரனராம் ஜாத். இவருக்கும், வனு தேவிக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். தனக்கு ஒரு ஆண் மகன் இல்லையே என்று வனு தேவி அடிக்கடி வருத்தப்படுவாராம். 

சம்பவத்தன்று, ரனராம் வேலைக்குச் சென்ற பிறகு, தனது ஐந்து மகள்களையும் கிணற்றுக்கு அழைத்துச் சென்று ஒவ்வொருவராகத் தள்ளிக் கொலை செய்த வனு தேவி, பிறகு தானும் குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உடல்களைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த பெண்கள் படித்த பள்ளியின் தாளாளர் சம்பவம் குறித்து அறிந்ததும் வேதனை தெரிவித்தார். ஐந்து பெண்களும் நன்கு படிக்கக் கூடியவர்கள், கடந்த வாரம்தான் ரனராம் வந்து பள்ளிக் கட்டணத்தை செலுத்தினார். 24ம் தேதி பள்ளி திறந்தும் கூட, ஐந்து பேரும் கடந்த இரண்டு நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. அதற்குள் இடியான் இந்த செய்தி கிடைத்தது என்கிறார் ஆதங்கத்தோடு.

காவல்துறை எஸ்.பி. இது குறித்துக் கூறுகையில், பெண்களே, தற்கொலை என்றுமே, எந்தப் பிரச்னைக்குமே தீர்வாகாது. உங்கள் நண்பர்கள், நலம் விரும்பிகளுடன் பிரச்னையை பகிர்ந்து கொள்ளுங்கள். வீட்டில் இருப்பவர்கள் உங்கள் பிரச்னையைக் கேட்கவில்லை என்றால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் உங்கள் பிரச்னையைப் பேசுங்கள். இதுபோன்ற விஷயங்களில் விழிப்புணர்வு நிச்சயம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com