ரூ.342 கோடி நில விவகார ஊழலில் மகாராஷ்டிர அமைச்சருக்கு தொடர்பு: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் ரூ.342 கோடி மதிப்புக்கு நடைபெற்றுள்ள நில ஒப்பந்த விவகார ஊழலில் மாநில வருவாய்த் துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீலுக்கு தொடர்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.


மகாராஷ்டிர மாநிலம், புணேயில் ரூ.342 கோடி மதிப்புக்கு நடைபெற்றுள்ள நில ஒப்பந்த விவகார ஊழலில் மாநில வருவாய்த் துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீலுக்கு தொடர்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
புணே மாவட்டம், ஹவேலி தாலுகாவில் உள்ள நிலம், பேலாவடியில் உள்ள நிலம் ஆகியவை கட்டணம் எதுவும் பெறப்படாமல் தனியாருக்கு வழங்கப்பட்டதாகவும், இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதில் ரூ.342 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாகவும், இந்த ஊழலில் அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீலுக்கு தொடர்பிருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இந்த விவகாரத்தை தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீல் வியாழக்கிழமை எழுப்பினார். இருப்பினும் அவரது பேச்சு, அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.
இந்த விவகாரத்தால் சட்டப்பேரவையில் அமளி நிலவியது. இதனால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து அவை கூடியபோது, அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் விளக்கமளித்தார். எனினும் அதை எதிர்க்கட்சியினர் ஏற்கவில்லை.
பின்னர் மகாராஷ்டிர சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான விஜய் வடேடிவர், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெயந்த் பாட்டீல், அஜித் பவார், ஜிதேந்திர அவாத் ஆகியோர் அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதுடன், அவர் உடனடியாக தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயந்த் பாட்டீல், புணேயில் உள்ள 2 இடங்கள் தொடர்பான ஒப்பந்தங்களில், தனியார் பயனடைவதை அமைச்சர் உறுதி செய்துள்ளார். ரூ.342 கோடி மதிப்புக்கு ஊழல் நடந்துள்ளது. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
இந்த ஊழல் குற்றச்சாட்டை சந்திரகாந்த் பாட்டீலை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், 1885ஆம் ஆண்டு நில ஆவணங்களின்படி, சம்பந்தப்பட்ட அந்த 2 இடங்களும், தேவஸ்தான் இடமாகும் (இனாம் நிலம்). ஆதலால் அந்த நிலத்துக்கு பணம் செலுத்த தேவையில்லை. பலேவாடி இட விவகாரத்தில், நில அளவையாளர் வெறும் மதிப்பீடு மட்டுமே செய்துள்ளார் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com