நாடு திரும்பினார் அபிநந்தன்: வாகா எல்லையில் ஒப்படைப்பு; மக்கள் ஆரவார வரவேற்பு

பாகிஸ்தான் பிடியில் இருந்த இந்திய விமானப் படை அதிகாரி அபிநந்தன் வர்த்தமான், வெள்ளிக்கிழமை பத்திரமாக நாடு திரும்பினார்.
கம்பீரமாக எல்லையை வந்தடைந்த அபிநந்தன்.
கம்பீரமாக எல்லையை வந்தடைந்த அபிநந்தன்.


பாகிஸ்தான் பிடியில் இருந்த இந்திய விமானப் படை அதிகாரி அபிநந்தன் வர்த்தமான், வெள்ளிக்கிழமை பத்திரமாக நாடு திரும்பினார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகள் அவரை, இந்திய விமானப் படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
பாகிஸ்தான் பிடியில் சிக்கிய அபிநந்தன் சுமார் இரண்டரை நாள்களுக்குப் பிறகு நாடு திரும்பியுள்ளார்.
முன்னதாக, அபிநந்தன் பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை லாகூரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
பின்னர் பாகிஸ்தான் அதிகாரிகள் அபிநந்தனை அழைத்துக் கொண்டு ராணுவ வாகனத்தில் சாலை மார்க்கமாக வாகா-அட்டாரி எல்லைக்கு புறப்பட்டனர். மாலை சுமார் 5.24 மணியளவில் பாகிஸ்தானின் வாகா எல்லையை அவர்கள் வந்தடைந்தனர்.
அவர்களுடன், இஸ்லாமாபாதில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகளும் உடன் வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் வாகா-அட்டாரி எல்லையில், சுங்கம் மற்றும் குடியேற்றம் தொடர்பான உரிய ஆவண நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. 
இறுதியாக அபிநந்தன், இருநாட்டுக்கும் பொதுவான எல்லைப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு இந்திய விமானப் படை மற்றும் எல்லை பாதுகாப்புப் படை உயரதிகாரிகள் இருவரிடம் இரவு 9.20 மணியளவில் ஒப்படைக்கப்பட்டார். அப்போது, அபிநந்தன் வெள்ளை நிறச் சட்டையுடன், நீல நிற கோட்டும், சாம்பல் நிற கால்சட்டையும் அணிந்து மிடுக்குடன் இந்திய எல்லைக்குள் வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் காரில் அமிருதரஸ் விமான படைத்தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து அவர் தில்லி அழைத்துச் செல்லப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் நிகழ்வையொட்டி, அட்டாரி எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. 
முன்னதாக, அமைதிக்கான நல்லெண்ண நடவடிக்கையாக எந்தவித நிபந்தனையும் இன்றி அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.
எல்லையில் உற்சாக வரவேற்பு: நாடு திரும்பும் அபிநந்தனை வரவேற்கும் வகையில் பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டாரியில் வெள்ளிக்கிழமை காலை முதலே மக்கள் பெருந்திரளாகக் கூடி ஆடிப், பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாமதம்: அட்டாரி-வாகா எல்லையை வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5.24 மணியளவில் அபிநந்தன் வந்தடைந்தார். எனினும், ஆவண நடைமுறைகள் காரணமாக அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பது இரவு வரை தாமதமானது. அதைத் தொடர்ந்து, வழக்கமான நடைமுறைகளுக்குப் பிறகு அபிநந்தன் இந்திய விமானப்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை அந்த அதிகாரிகள் கைகுலுக்கி வரவேற்றனர். பின்னர் அட்டாரி-வாகா எல்லையிலிருந்து அவர் கார் மூலம் பலத்த பாதுகாப்புடன் அமிருதசரஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மருத்துவப் பரிசோதனை: அபிநந்தன் ஒப்படைப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த விமானப் படை  துணைத் தளபதி ஆர்.ஜி.கே. கபூர், விமானத்திலிருந்து கீழே விழுந்துள்ளதால் அபிநந்தனின் உடல் நலன் குறித்து அறிந்துகொள்ள, அவருக்கு முழுமையான உடல் பரிசோதனை செய்யப்படும். இது வழக்கமான நடைமுறையாகும் என்றார்.
கோரிக்கை நிராகரிப்பு: அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்ததைத் தொடர்ந்து, அவரை விமானம் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் இந்தியா கோரியது. எனினும், இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான், அட்டாரி-வாகா எல்லை வழியாக அபிநந்தனை ஒப்படைப்பதாகத் தெரிவித்தது.
அணிவகுப்பு ரத்து: அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் நிகழ்வின் காரணமாக, அட்டாரி-வாகா எல்லையில் அன்றாடம் கொடியிறக்கும்போது நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டது.

ராவல்பிண்டியில் இருந்து வாகா  வரை...
*  அபிநந்தன் முதலில், பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இருந்து லாகூருக்கு அழைத்து வரப்பட்டார்.

*  அபிநந்தன் முதலில், பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இருந்து லாகூருக்கு அழைத்து வரப்பட்டார்.

*  அங்கேயே அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

*  அதன் பிறகு, வாகா எல்லையில் இருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள பதாபூர் பகுதிக்கு அழைத்து வரப்பட்டார்.

*  அங்கு அவருக்கான ஆவண நடைமுறைகள் மேற்கொள்ளப் பட்டது. அதில் சற்று தாமதமாகியது. 

*  இறுதியாக, இரவு 9.20 மணியளவில் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். 

தாய்நாட்டுக்கு திரும்பியது மகிழ்ச்சி: விமானப் படை அதிகாரி​
இந்திய மண்ணில் அபிநந்தன் கால் வைத்ததும் தாய்நாட்டுக்கு திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதனை, அவருடன் இருந்த விமானப் படை அதிகாரி ஒருவர் கூறினார்.
அபிநந்தனின் விடுதலை குறித்து, விமானப் படையின் சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பதிவில், விங் கமாண்டர் அபிநந்தன், எங்களுடன் மீண்டும் இணைந்துள்ளார். போர் வீரராக துணிச்சலுடன் செயல்பட்ட அபிநந்தனை எண்ணி, இந்திய விமானப்படை பெருமை கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வரவேற்பு...  
நாடு திரும்பிய விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்கிறேன். உங்களின் (அபிநந்தன்) தைரியத்துக்காக நாடே பெருமை கொள்கிறது. 130 கோடி இந்தியர்களுக்கும் உத்வேகம் அளிப்பவர்களாக நமது பாதுகாப்புப் படையினர் உள்ளனர். வந்தே மாதரம்!


அட்டாரியில் அபிநந்தனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கக் காத்திருந்த பொதுமக்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com