
ஆந்திரத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் "சேவா மித்ரா' செயலி மூலம் தகவல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக, அந்த செயலியை நிர்வகிக்கும் ஹைதராபாதைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மீது தெலங்கானா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், அந்த நிறுவனம் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனர். ஹைதராபாதைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த புகாரில், "ஆந்திர அரசின் பல்வேறு நலத் திட்ட பயனாளர்களின் ஆதார் எண் உள்பட ஏராளமான அதிகாரப்பூர்வ தகவல்களை தெரிந்து கொள்வதற்கு அந்த நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சேவா மித்ரா செயலி மூலம் வாக்காளர்களின் தகவல் திருட்டில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது' என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், தெலங்கானா மாநில காவல்துறையின் நடவடிக்கையை ஆந்திர தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம்.லோகேஷ் விமர்சித்துள்ளார். ஆந்திர அரசால் பணியமர்த்தப்பட்டுள்ள நிறுவனத்துக்கு, தெலங்கானா காவல்துறையினர் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.
மேலும், "சேவா மித்ரா செயலி, தெலுங்கு தேசம் தொண்டர்களுக்கானது. இந்த விவகாரத்தில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு எதிராக பிரதமர் மோடி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் கூட்டாக சதி செய்கின்றனர்' என்று தெலுங்கு தேசம் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
இதனிடையே, இந்த விவகாரத்தில் ஆந்திர அரசு சார்பில் எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கை தொடர்பாக அந்த மாநில தலைமை அரசு வழக்குரைஞருடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.