பதிலடி தாக்குதல்: அமெரிக்கா, இஸ்ரேல் வரிசையில் இந்தியா!: அமித் ஷா பெருமிதம்

தங்களது படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, பதிலடி தாக்குதல் நடத்தி பழிவாங்கிய அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பெருமிதத்துடன்
பதிலடி தாக்குதல்: அமெரிக்கா, இஸ்ரேல் வரிசையில் இந்தியா!: அமித் ஷா பெருமிதம்

தங்களது படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, பதிலடி தாக்குதல் நடத்தி பழிவாங்கிய அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பெருமிதத்துடன் கூறினார்.
மேலும், இந்திய ஆயுதப் படையினரின் துணிச்சலை எதிர்க்கட்சிகள் சந்தேகிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
குஜராத் மாநிலம், சூரத்தில் பிரதமர் நரேந்திர மோடி சார்ந்த சமூகத்தினரின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், அமித் ஷா பங்கேற்றுப் பேசியதாவது:
பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களை தாக்கி அழித்ததன் மூலம் இந்திய விமானப் படையினர் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ் இது சாத்தியமாகியுள்ளது. பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்பதை, துல்லியத் தாக்குதல் மற்றும் விமானப் படை தாக்குதல் மூலம் வெளியுலகுக்கு பிரதமர் மோடி உணர்த்தியுள்ளார்.
விமானப் படை தாக்குதல் தொடர்பான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கோருகிறார். இந்த தாக்குதல், அரசியலாக்கப்படுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டுகிறார். தாக்குதல் விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகிறார். எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் இத்தகைய கருத்துகள், பாகிஸ்தானை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இதுபோன்ற கருத்துகளை தெரிவித்தமைக்காக, எதிர்க்கட்சித் தலைவர்கள் வெட்கி தலை குனிய வேண்டும்.
பிரதமர் மோடியின் துணிவு, உங்களில் யாருக்கும் கிடையாது என்பதை நாட்டு மக்கள் அறிவர். விமானப் படை தாக்குதல் விவகாரத்தில், பிரதமரை பாராட்டவிட்டாலும் பரவாயில்லை; எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாலே போதுமானது.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், ஒரு புறம் தனது வழக்கமான பணிகளை மேற்கொண்ட பிரதமர், மற்றொரு புறம் பயங்கரவாதிகளை தண்டிப்பதற்கான திட்டத்தை தீட்டினார். அதன்படி, நமது விமானப் படையின் துணிவுமிக்க வீரர்கள், வான்வழி தாக்குதல் நடத்தி, ஏராளமான பயங்கரவாதிகளை கொன்றொழித்துவிட்டு, பாதுகாப்பாக நாடு திரும்பினர்.
தங்களது படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தி பழிவாங்கிய அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் தற்போது இணைந்திருக்கிறது. இந்தியாவை எளிதாக நினைத்துவிட முடியாது என்பதை உலக நாடுகள் இப்போது ஒப்புக் கொண்டுள்ளன. இந்தியப் படையினர் மீது தாக்குதல் நடத்தினால் என்ன நிகழும் என்பதை உலக நாடுகள் உணர்ந்து கொண்டுள்ளன என்றார் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com