பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல் குறித்து மோடிக்கே சந்தேகம்:  மணீஷ் திவாரி

இந்திய விமானப் படை அண்மையில் நடத்திய வான்வழித் தாக்குதல் குறித்து பிரதமர் மோடியே சந்தேகம் எழுப்புகிறார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறியுள்ளார்.
பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல் குறித்து மோடிக்கே சந்தேகம்:  மணீஷ் திவாரி

இந்திய விமானப் படை அண்மையில் நடத்திய வான்வழித் தாக்குதல் குறித்து பிரதமர் மோடியே சந்தேகம் எழுப்புகிறார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறியுள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த அவர், இது குறித்து மேலும் கூறியதாவது:
இந்திய விமானப் படையின் போர் விமானங்கள், கடந்த வாரம் பாகிஸ்தான் பகுதிக்குள் ஊடுருவி, குண்டுகளை வீசி பயங்கரவாத முகாம்களை அழித்தொழித்தது.
இதற்கு முன்பு இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றபோது, அதற்கான ஆதாரங்களை காங்கிரஸ் கட்சி கேட்கவில்லை. தற்போது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் காங்கிரஸ் ஆதாரம் கேட்கவில்லை.
ஆனால், அந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடியே சந்தேகம் எழுப்புகிறார். நிகழ்ச்சியொன்றில் அவர் பேசும்போது, இந்த நேரத்தில் ரஃபேல் போர் விமானம் மட்டும் இருந்திருந்தால், நிலைமை முற்றிலும் வேறு மாதிரியாக மாறியிருக்கும்; ரஃபேல் போர் விமானம் இல்லாததை இந்த நாடு உணர்கிறது என்று கூறினார். இதற்கு என்ன அர்த்தம்? இந்திய விமானப் படையின் தாக்குதல் குறித்து அவருக்கே சந்தேகம் எழுகிறது.
மேலும், போர் விமானம் கொள்முதல் தொடர்பான முந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மோடி அரசுதான் ரத்து செய்தது. எனவே, அந்தப் போர் விமானம், இந்திய விமானப் படைக்கு வருவது தாமதமாவதற்கு அவரே பொறுப்பாவார்.
அபுதாபியில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் (ஓஐசி) மாநாட்டில் பங்கேற்க வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் பங்கேற்க சுஷ்மாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை இந்தியாவுக்கு ராஜீய ரீதியில் கிடைத்த வெற்றி என்று மத்திய பாஜக அரசு கொண்டாடியது. ஆனால், அந்த மாநாட்டில், காஷ்மீர் பிரச்னையை எழுப்பி இந்தியாவுக்கு எதிராக, பாகிஸ்தான் அரசு கொண்டு வந்த தீர்மானத்தை ஓஐசி அமைப்பில் உறுப்பினராக 57 இஸ்லாமிய நாடுகளும் ஆதரித்தன. இதுதான், ராஜீய ரீதியிலான சாதனையா? என பிரதமர் மோடியும், சுஷ்மா ஸ்வராஜும் விளக்கம் தர வேண்டும் என்றார் அவர்.
இதனிடையே, அபுதாபியில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீர் மாநிலம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் திட்டவட்டமாகக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com