
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை விரைவில் 1 கோடியைத் தாண்டும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 60 வயதுக்குப் பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கும் "பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் (பிஎம்-எஸ்ஒய்எம்)' திட்டத்தை இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு தொழிலாளர் அமைச்சக இணையதளத்தில் இதுவரை 10.95 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் பல தொழிலாளர்கள் பதிவு செய்வதற்கு வசதியாக நாடு முழுவதும் 2.36 லட்சம் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிஎம்-எஸ்ஒய்எம் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், ""தேசிய அளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ள இத்திட்டத்தின் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்கள் பலர் பயன்பெற உள்ளனர். இத்திட்டத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை விரைவில் 1 கோடியைத் தாண்டும்'' என்றார்.
இந்நிகழ்ச்சியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.