
நாட்டின் பாதுகாப்பு விஷயங்களை முன்னிறுத்தி பிரதமர் நரேந்திர மோடி அரசியல் செய்வதைத் தடுக்க வேண்டுமெனில், எதிர்க்கட்சிகள் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம் என்று மக்கள் மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த மாதம் 14ம் தேதி தற்கொலைப் படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். அதைத்தொடர்ந்து, பாகிஸ்தானின் பாலாகோட்டில் இருந்த பயங்கரவாத முகாம்களை இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி தகர்த்தன.
இந்த இரு விவகாரங்களையும் முன்வைத்து எதிர்க்கட்சிகள் அரசை விமர்சிக்கும்போது, அதை அரசியல் செய்வதற்கான வாய்ப்பாக பாஜக தலைவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்று ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, சுட்டுரையில் அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:
புல்வாமா தாக்குதல் அல்லது இந்திய விமானப்படை தாக்குதலை முன்வைத்து பிரதமர் மோடி அரசியல் செய்ய எதிர்க்கட்சிகள் இடமளிக்கக் கூடாது. எதிர்க்கட்சிகள் தங்களுக்கான பாதையை மாற்றிக் கொள்ள வேண்டும். பொருளாதார பிரச்னை, கிராமப்புற இடர்கள், வேலையின்மை, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுவதை பாஜக விரும்பவில்லை. அதை எதிர்க்கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
புல்வாமா அல்லது பாலாகோட் விவகாரம் குறித்து ஒவ்வொரு முறை நாம் பேசும்போதும், பிரதமருக்கும், பாஜக தலைவர்களுக்கும் அதை வைத்து பலத்தை காண்பிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறோம்.
எனவே, உத்திகளை மாற்றுவதன் மூலமாக, நமது பலம் குறித்து அவர்களைப் பேச வைக்க வேண்டும்'' என்று ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.