அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர் மூலம் தீர்வு காண உச்ச நீதிமன்றம் உத்தரவு

அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தரை நியமித்து சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர் மூலம் தீர்வு காண உச்ச நீதிமன்றம் உத்தரவு


அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தரை நியமித்து சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அயோத்தி நிலப் பிரச்னையில் தீர்வு காண, ஓய்வு பெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்த குழு அமைக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்தியஸ்தர் குழுவில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு என 3 பேர் இடம்பெற்றுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சமரசப் பேச்சுவார்த்தை மிக ரகசியமாக நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்தியஸ்தம் தொடர்பான பேச்சுவார்த்தை ஒரு வாரத்தில் தொடங்கி 8 வாரத்தில் நடந்து முடிய வேண்டும். அயோத்தி சமரச பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்களை ஊடகங்கள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ராமஜென்ம பூதி - பாபர் மசூதி தொடர்பான விவகாரத்தில் மத்தியஸ்தரை நியமித்து தீர்வு காண உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. 

அயோத்தி பிரச்னை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ. நாஸர் ஆகியோரைக் கொண்ட அமர்வு இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

வழக்கு விசாரணையின் போது நிர்மோஹி அகாரா தவிர்த்த பிற ஹிந்து அமைப்புகள், மத்தியஸ்தரை நியமித்து, அயோத்தி பிரச்னை குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. அதேநேரத்தில், முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும், மத்தியஸ்தரை நியமிப்பதற்கு ஆதரவு தெரிவித்தன. ஹிந்து அமைப்பான நிர்மோஹி அகாரா, ஓய்வு பெற்ற நீதிபதிகளான குரியன் ஜோசப், ஏ.கே.பட்நாயக், ஜி.எஸ். சிங்வி ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்தது. ஹிந்து மகா சபை, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகளான ஜே.எஸ்.கேஹர், தீபக் மிஸ்ரா, நீதிபதி (ஓய்வு) ஏ.கே.பட்நாயக் ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்திருந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கு, வெறும் நிலம் தொடர்பானது மட்டுமல்ல. மக்களின் நம்பிக்கை, உணர்வும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது. முகலாய ஆட்சியாளர் பாபர் என்ன செய்தார், அதன்பிறகு என்ன நடைபெற்றது என்பது குறித்து எங்களுக்கு கவலையில்லை. தற்போதைய நிலையில் அங்கு என்ன இருந்தது என்பது குறித்து மட்டுமே கவனத்தில் எடுத்து கொள்வோம். சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் (மனுதாரர்கள்), மத்தியஸ்தம் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது. 

அயோத்தி விவகாரத்தில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதில் நிர்மோஹி அகாரா, ராம் லாலா, சன்னி வக்பு வாரியம் ஆகியன பிரச்னைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை தங்களுக்குள் சரிசமமாக பங்கீட்டு கொள்ளும்படி உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் 14 பேர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்தியஸ்தர் மூலம் தீர்வு காண பரிந்துரை செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com