மோடியை விமர்சிப்பதன் மூலம் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார் ராகுல்: அருண் ஜேட்லி

இந்திய ராணுவத்தின் வலிமையைச் சந்தேகித்து மக்களின் வெறுப்பைச் சம்பாதித்த காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தற்போது பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பதன் மூலம் மக்களின்
மோடியை விமர்சிப்பதன் மூலம் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார் ராகுல்: அருண் ஜேட்லி


இந்திய ராணுவத்தின் வலிமையைச் சந்தேகித்து மக்களின் வெறுப்பைச் சம்பாதித்த காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தற்போது பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பதன் மூலம் மக்களின் கவனத்தைத் திசை திருப்ப முயல்வதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்களும் தெரிவித்து வந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன்மூலம் உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய கணக்குத் தணிக்கையாளரை விட ராகுல் காந்தி உயர்ந்தவர் என்று யாரும் கூற முடியாது.
ரஃபேல் ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் காங்கிரஸ் தலைவர்கள் பொய்க் குற்றச்சாட்டுகளை மட்டுமே தெரிவித்து வருவது தற்போது உறுதியாகி உள்ளது. கடந்த சில நாள்களாக இந்திய ராணுவத்தின் வலிமை குறித்து காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்து வந்த கருத்துகளால், அவர்கள் பாகிஸ்தானில் உள்ள தொலைக்காட்சிகளில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றனர். ஆனால், இந்திய மக்கள் அனைவரும் காங்கிரஸ் தலைவர்கள் மீது கடும் வெறுப்புணர்வைக் கொண்டுள்ளனர்.
 எனவே, தற்போது ரஃபேல் விவகாரத்தை மீண்டும் கையிலெடுத்து பொய்ப் பிரசாரங்களை காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மக்களின் கவனத்தை அவர்கள் திசை திருப்ப முயல்கின்றனர். ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ரகசிய ஆவணங்கள் பொது வெளியில் கசிந்துள்ளன. நாட்டில் பத்திரிகைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அதை நாங்கள் மதிக்கிறோம். இருந்தபோதிலும், நாட்டின் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. கடந்த 72 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்ததில்லை.
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான நிலைப்பாட்டை மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. உச்சநீதிமன்றமும் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விவரங்களைத் தெளிவாகத் தெரிவித்துள்ளது என்று அவர் கூறினார். ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான பாதுகாப்புத் துறையின் ஆவணங்களை ஆங்கில நாளிதழ் ஒன்று அண்மையில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com