நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள்: சுனில் அரோரா 

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். 
நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள்: சுனில் அரோரா 

புது தில்லி: நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஞாயிறன்று தில்லியில் வெளியிட்டார்.

இதுதொடர்பாக தில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணையர்கள் அசோக் லவாசா மற்றும் சுகில் சந்திரா பேட்டியளித்தனர். அப்போது தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து சுனில் அரோரா கூறியதாவது:

அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளோடு விரிவான ஆலோசனை நடத்தி தேர்தலை சுமூகமாக நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளோம். வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வது பற்றியும் ஆலோசித்தோம்

தற்போது வரை 23 மாநிலங்களில் 100  சதவிகித வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன; வேட்புமனு தாக்கல் நடைபெறும் கடைசி நாள் வரை வாக்காளர் பட்டியல்கள் திருத்தம் நடைபெறும்

மொத்தம் 90 கோடி வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்க தகுதியானவர்கள். வாக்காளர் பட்டியல் சரியாக இருக்க வேண்டியது அவசியம்; அதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம்.இந்த தேர்தலில் மொத்தம் 8.4 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.இலவச டோல்பிரீ எண் 1950 மூலம் புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை சரிபார்க்கலாம்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் இருக்கும். புகைப்படத்துடன் கூடிய வாக்குச் சாவடி சீட்டு தேர்தலுக்கு 5 நாள் முன்பே வழங்கப்படும். ஆனால் உரிய அடையாள அட்டை கொண்டே வாக்களிக்க வேண்டும். ஏறக்குறைய 10 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ள உதவும் 17.4 லட்சம் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள்  அனைத்து வாக்குச் சாவடிகளில் இருக்கும். அனைத்து கட்டத்திலும் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க பலகட்ட தேர்தல்  பார்வையாளர்கள் இருப்பார்கள்

அரசியல்கட்சிகள் பிரசாரத்தின் போது இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிப்பெருக்கி வைக்கக் கூடாது. வேட்பாளர்கள் படிவம் 26 தாக்கல் செய்யாவிட்டால் அவர்களது வேட்புமனு நிராகரிக்கபப்டும். 18 முதல் 19 வயதுக்குள் 1.5 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்ததேர்தலில் மொத்தம் 8.4 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்

தேர்தலை அமைதியாக நடத்த மத்திய ரிசர்வ் பாதுகாப்புப்படையினர் அதிக அளவில் குவிக்கப்பட இருக்கின்றனர். தேர்தல் விதிமீறல்கள் குறித்து ஆண்ட்ராய்டு ஆப்-மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரது அடையாளம் பாதுகாக்கப்படும்; நடவடிக்கைகள் செய்தியாக வெளியிடப்படும்.

நிலுவையில் உள்ள குற்றவழக்குகள் குறித்து பரப்புரை காலங்களில் 3 முறை வேட்பாளர்கள் கூறவேண்டும் வாக்குச்சாவடி மையங்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் கேட்க தனி ஆண்ட்ராய்ட் ஆப் அறிமுகம் செய்யப்படும்.

பத்திரிகைகளில் பணம் தந்து செய்திகள் வெளியிடுவதைக் கண்காணிக்க அனைத்து பகுதிகளிலும் குழு அமைக்கப்படும். காட்சிகள் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியிடுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com