
மக்களவைத் தேர்தலில் 22 தொகுதிகளில் பாஜக வென்றால், கூட்டணி அரசு நிலைக்காது என பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து பெலகாவி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மக்களவைத் தேர்தல் வேலைகளில் மும்முரமாக உள்ளோம். வெகுவிரைவாக கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்வோம். கர்நாடகத்தில் தற்போதுள்ள பாஜக எம்.பி.க்களையே தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்க திட்டமிட்டுள்ளோம். ஒருசில தொகுதிகளில் மட்டும் மாற்றம் இருக்கலாம்.
மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் இருந்து 22 தொகுதிகளை வெல்ல உறுதி பூண்டுள்ளோம். அதற்காக பாஜக பல்வேறு வகைகளில் முயற்சித்து வருகிறது. கர்நாடகத்தில் நடைபெற்று வரும் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கூட்டணி குறித்து அதன் கட்சித் தலைவர்களிடையே கருத்து முரண்பாடு காணப்படுகிறது. இதன் காரணமாக, இம் முறை மக்களவைத் தேர்தலில் பாஜக 22 இடங்களில் வெல்வது உறுதி. மக்களவைத் தேர்தலில் 22 தொகுதிகளை பாஜக வென்றால், கூட்டணி அரசு நிலைத்திருப்பது கடினம்.
பயங்கரவாதி மசூத்தை பாஜக அரசு தான் விடுவித்தது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். ராகுல் காந்தி இன்னும் இளைஞர். அவருக்கு சில விஷயங்கள் புரியாது. எனவே, ராகுல் காந்தியின் கருத்துக்கு என்னவென்று பதில் கூறுவது. அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் எந்த மாதிரியான சூழ்நிலை நிலவியது என்பது உலகத்துக்கே தெரியும். பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரதமர் மோடி கடினமான நடவடிக்கை எடுத்துள்ளார். பயங்கரவாதிகளை அழிக்க கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பது காங்கிரஸாருக்கு பிடிக்கவில்லை என்றார் அவர்.