
"பிரதமராகும் எண்ணம் எனக்கு இல்லை; ஆர்எஸ்எஸ் அமைப்பிடமும் என்னை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் திட்டமில்லை. அரசியலிலோ அல்லது பணியிலோ என்றுமே நான் "கணக்கு' போட்டதில்லை'' என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடிக்குப் பதிலாக, நிதின் கட்கரி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்றும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் கட்கரியை முன்னிறுத்துவதாகவும், கடந்த சில தினங்களாக ஊகத்தின் அடிப்படையிலான செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இதனால், ஏற்பட்ட குழப்பங்களுக்கு நிதின் கட்கரி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டி:
நான் இதுவரை எந்தக் கணக்கும் போட்டதில்லை; இலக்குகளையும் நிர்ணயித்தது கிடையாது. அரசியலிலும் சரி, பணியிலும் சரி, நான் அப்படிச் செய்ததே இல்லை. நான் பயணிக்கும் பாதை எங்கு கொண்டு செல்கிறதோ அதை பின்பற்றுகிறேன். என்னிடம் என்ன பொறுப்பு கொடுத்தாலும் முடித்திருக்கிறேன். நாட்டுக்கு சிறப்பானதை செய்வதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
தேசமே பிரதானம்: பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இல்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பும் அப்படி நினைக்கவில்லை. எங்களுக்கு தேசம்தான் பிரதானம். நான் கனவு காணவில்லை. யாரிடமும் சிபாரிசுக்காக செல்லவும் இல்லை. பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்பதை மனப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் மோடி சிறப்பாக பணியாற்றி வருகிறார். நானும், கட்சியினரும் அவருக்கு உறுதுணையாக இருக்கிறோம். எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்திருக்கிறோம். மோடி தலைமையின் கீழ், கடந்த முறையைக் காட்டிலும் கூடுதல் தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம்.
உயிரி எரிபொருள்: உயிரி எரிபொருள் மற்றும் இயற்கை விவசாயம் குறித்து நிறைய ஆயத்தங்களை மேற்கொண்டிருக்கிறேன். உயிரி எரிபொருளுக்கான நல்ல காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. டிராக்டர்களுக்கான எரிவாயு இயந்திரங்களை போலந்து நாட்டில் இருந்து பெற்றிருக்கிறோம். இதன் மூலம், ஆண்டு ஒன்றுக்கு, ஒரு டிராக்டர் பயன்பாட்டில் ரூ.60,000 சேமிக்கப்படும்.
மூங்கில் மரத்தில் இருந்து உயிரி எரிவாயு தயாரிக்க முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. டேராடூனில் உள்ள பெட்ரோலிய ஆய்வகத்தில் அதுகுறித்து மேலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பழங்குடியின பகுதிகளில் இருந்து உயிரி எரிவாயுவை உற்பத்தி செய்ய முடிந்தால், மலைவாழ் மக்களுடன் நாங்கள் இணைந்து செயல்படுவோம். அதன் மூலம் ரூ.30,000 கோடி வரை சேமிக்க முடியும் என்றார் கட்கரி. மத்திய அரசில், நெடுஞ்சாலைப் போக்குவரத்து, கப்பல்துறை, நீர்வளம் மற்றும் நதிநீர் மேம்பாடு, கங்கை தூய்மைப் பணி ஆகிய துறைகளை கட்கரி கவனித்து வருகிறார்.
நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் நிதின் கட்கரி ஆற்றி வரும் பங்களிப்பு ஆச்சரியமளிக்கும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சியைச் சேர்ந்தவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவருமான சோனியா காந்தி, மக்களவையில் கடந்த மாதம் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.