Enable Javscript for better performance
பொறுத்தது போதும்: பயங்கரவாதம் குறித்து பிரதமர் கருத்து- Dinamani

சுடச்சுட

    

    பொறுத்தது போதும்: பயங்கரவாதம் குறித்து பிரதமர் கருத்து

    By DIN  |   Published on : 11th March 2019 01:34 AM  |   அ+அ அ-   |    |  

    MODICRPF

    "பயங்கரவாதத்தால் ஏற்பட்ட வலியை இந்தியா நெடுங்காலமாக அனுபவித்து விட்டது. பொறுத்தது போதும். பயங்கரவாத பாதிப்புகளை நாடு காலத்துக்கும் அனுபவிக்க முடியாது'' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
     பஞ்சாப் மாநிலம், உரியில் கடந்த 2016-ஆம் ஆணடிலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த மாதம் 14-ஆம் தேதியிலும் நடத்தப்பட்ட மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களை குறிப்பிடும் வகையில் பிரதமர் இதைத் தெரிவித்தார்.
     பாகிஸ்தானின் பாலாகோட்டில், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை மேலோட்டமாகக் குறிப்பிட்ட அவர், ""சில நேரங்களில் கடுமையான முடிவுகளை அரசு எடுக்க வேண்டியுள்ளது'' என்று தெரிவித்தார்.
     விமான நிலையங்கள், அணுஉலைகள், துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், உயர் அதிகாரமிக்க அரசு கட்டடங்கள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் (சிஐஎஸ்எஃப்) 50-ஆம் ஆண்டு நிறுவன விழா, உத்தரப் பிரதேச மாநிலத்தின் காஜியாபாத் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     அந்த விழாவில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் சார்பில் கண்கவர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி உரையாற்றுகையில், அந்தப் படை வீரர்களின் பணிகளை வெகுவாகப் பாராட்டினார். பயங்கரவாத பாதிப்புகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். மோடி பேசியதாவது:
     நக்சல் தீவிரவாதம், அரசுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பயங்கரவாதத்தால் ஏற்பட்ட வலியாலும், காயங்களாலும், பல ஆண்டுகளாக இந்நாடும், எண்ணற்ற குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. புல்வாமாவிலும், உரியிலும் நடந்த சம்பவங்கள் மனவலியைத் தருகிறது. இந்த வலியை காலத்துக்கும் அனுபவிக்க முடியாது. பொறுத்தது போதும்.
     சில நேரங்களில், சிலருக்கு (பயங்கரவாதம்) எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது. அத்தகைய முடிவுகளுக்கு, நாட்டின் பல கோடி மக்கள் ஆதரவளிப்பது எனது பாக்கியம்.
     புதிய கொள்கை: பயங்கரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு புதிய கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. அது, பணியின்போது கொல்லப்பட்ட வீரர்களுடைய குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப கடமையாற்ற வேண்டும் என்பதே.
     சவால்களை நமது பாதுகாப்பு படையினர் எதிர்கொள்ளத் தேவையான அனைத்து நவீன உபகரணங்களையும் அரசு கொள்முதல் செய்து வருகிறது.
     போர் புரிய திறனில்லாத, பகையுணர்வு கொண்ட அண்டை நாட்டுக்கு (பாகிஸ்தான்) மத்தியில் நமது நாட்டின் முக்கியமான சொத்துகளை சிஐஎஸ்எஃப் வீரர்கள், வீராங்கனைகள் பாதுகாத்து வருகின்றனர்.
     நாட்டில் பல்வேறு சதிவலைகள் பின்னப்படுகின்றன. அதற்கு எல்லை கடந்த ஆதரவு கிடைக்கிறது. இதனால், பல்வேறு ரூபங்களில் பயங்கரவாதத்தின் கோரமுகம் வெளிச்சத்துக்கு வருகிறது.
     விஐபி கலாசாரம் கூடாது: சிஐஎஸ்எஃப் வீரர்கள் அவர்களது பணியை மேற்கொள்ளும்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை என்னைப் போன்ற விஐபி-க்கள்தான். விஐபி கலாசாரம் சில சமயங்களில் பாதுகாப்புக்கு மாபெரும் அச்சுறுத்தலாக அமையும். சிஐஎஸ்எஃப் வீரர்கள் சோதனைகளை மேற்கொள்ளும்போது, சிலர் எரிச்சலடைவார்கள். "உன்னை என்ன செய்கிறேன் பார்' என்று உங்களை அச்சுறுத்தவும் செய்வார்கள். ஆனால், நாங்கள் செய்ய வேண்டிய கடமை இதுதான் என்று அவர்களிடம் சொல்லுங்கள். சிஐஎஸ்எஃப் வீரர்கள் அவர்களது கடமையை செய்யும்போது, அதுபோன்ற நபர்கள் ஒழுக்கத்துடன் நடந்து கொள்வதுடன், தகுந்த ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று எச்சரிக்கிறேன்.
     சிஐஎஸ்எஃப் வீரர்களின் சோதனைகளை ஆரத்தியைப் போல நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும் என்றார் மோடி.
     
     
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp