
மத்தியில் பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இதையடுத்து சுட்டுரையில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உங்களது ஆசீர்வாதம் மீண்டும் தேவைப்படுகிறது. கடந்த 70 ஆண்டுகளாக நாட்டில் பூர்த்தி செய்யப்படாமல் இருந்த அடிப்படை வசதிகளை கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் நாங்கள் பூர்த்தி செய்து தந்துள்ளோம்.
அதை மேலும் வலுப்படுத்தவும், பாதுகாப்பான மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்கவும் நேரம் வந்துள்ளது. 5 ஆண்டுகால ஆட்சியில் 2.5 கோடி குடும்பத்தினருக்கு முதல்முறையாக மின்சார வசதி செய்து தரப்பட்டுள்ளது. 7 கோடி குடும்பங்கள், புகை நிரம்பிய சமையல் அறையில் இருந்து விடுதலை பெற்றுள்ளன. 1.5 கோடி மக்கள், சொந்த வீடுகளை பெற்றுள்ளனர்.
இதுவும், இதேபோன்ற மேலும் பல உதாரணங்களும், மத்திய அரசின் சரியான அணுகுமுறை, எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளை வெளிப்படுத்துகிறது. இதிலிருந்து எதுவும் சாத்தியப்படாதது இல்லை என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அந்தப் பதிவுகளில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
அமித் ஷா அறிவுறுத்தல்: இதனிடையே, சுட்டுரையில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவுகளில், மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ளார். மேலும் அவர், "130 கோடி இந்தியர்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு துணிச்சலான முடிவுகளை எடுத்தது. ஊழலை வேரறுத்ததுடன், நேர்மையானவர்களை கௌரவிக்கவும் செய்தது.
இந்தியப் பொருளாதாரம் உச்சபட்ச வளர்ச்சியடைவதை உறுதி செய்தது. எனவே, நடைபெறவுள்ள தேர்தல்களில் பாஜகவை 130 கோடி மக்களும் ஆசீர்வதிக்க வேண்டும்' என கோரியுள்ளார்.