
ரூபாய் நோட்டு வாபஸ் காலகட்டத்தில் பெட்ரோல் நிலையம் உள்பட 23 முக்கிய சேவை மையங்களில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. அவற்றில் எந்த அளவுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டன என்பது குறித்த தகவல் தங்களிடம் இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கூறியுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அந்த பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது.
கருப்புப் பண ஒழிப்பின் முக்கிய நடவடிக்கையாக இது கருதப்பட்டது. எனினும், மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், பெட்ரோல் நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ரயில் டிக்கெட், பொதுப் போக்குவரத்து, விமான டிக்கெட், மருந்துகள் வாங்குவது, மெட்ரோ ரயில் டிக்கெட், சமையல் எரிவாயு, மின்சாரம், குடிநீர் கட்டணம், சுங்கச் சாவடி கட்டணம் உள்ளிட்ட 23 இடங்களில் பழைய ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த 23 இடங்களிலும் அந்த காலகட்டத்தில் எவ்வளவு மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டன? என்று ஆர்பிஐ-யிடம் விவரம் கோரி தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பதிலளித்த ஆர்பிஐ, இது தொடர்பான தகவல்கள் எதையும் நாங்கள் பராமரிக்கவில்லை என்று கூறிவிட்டது.
கருப்புப் பணமாக பதுக்கப்பட்டுள்ள பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பாது என்ற நோக்கில்தான் மத்திய அரசு ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை எடுத்ததாகக் கூறப்பட்டது.
ஆனால், 99.3 சதவீத பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பிவிட்டன. இதையடுத்து, அந்த காலகட்டத்தில் வழக்கத்துக்கு அதிகமாக பணம் டெபாசிட் செய்யப்பட்ட வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை ஆய்வு செய்து நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது.