'தேசத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல்': ரஃபேல் வழக்கில் மத்திய அரசு பதில் மனு

ரஃபேல் ஒப்பந்த வழக்கில் மனுதாரர்கள் தாக்கல் செய்த ஆவணங்கள் தேசத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியது என்று மத்திய அரசு தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது. 
'தேசத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல்': ரஃபேல் வழக்கில் மத்திய அரசு பதில் மனு


ரஃபேல் ஒப்பந்த வழக்கில் மனுதாரர்கள் தாக்கல் செய்த ஆவணங்கள் தேசத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியது என்று மத்திய அரசு தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது. 

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான மறுஆய்வு வழக்கில் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் சஞ்சய் மித்ரா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளதாவது, 

"ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை மனுதாரர்கள் தாக்கல் செய்தது தேசத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் அனுமதி இல்லாமல் முக்கியமான ஆவணங்களின் நகலை எடுத்து, அதை மறுஆய்வு மனுக்களோடு தாக்கல் செய்ததன் மூலம், அவர்கள் ஆவணங்களை திருடியுள்ளனர். இது நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வெளிநாடுகளுடனான நட்புறவை பாதித்துள்ளது. 

பிரான்ஸ் நாட்டுடன் போடப்பட்டுள்ள பல்வேறு ஒப்பந்தங்களில் தேசத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரகசியம் காக்கப்பட்டு வந்தது. இந்த ஆவணங்களை நகல் எடுத்து தேசத்தின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் வெளியிட்டது குற்றமாகும். இந்த விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. 

அதேசமயம், இந்த தகவல்கள் எங்கு வெளியானது என்பதையும் மத்திய அரசு கண்டறிய வேண்டும். அதன்மூலம், வருங்காலத்தில் முடிவுகளை தீர்மானிக்கும் அரசு நடவடிக்கைகளின் புனிதத் தன்மை பேணி காக்கப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.     

இந்திய விமானப் படைக்கு, பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக மத்திய பாஜக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ரூ.58,000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதனிடையே, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், ரஃபேல் ஒப்பந்த நடைமுறையில் சந்தேகம் கொள்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

இத்தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி , முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் சௌரி, யஷ்வந்த் சின்ஹா, சமூக ஆர்வலர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 
அவற்றில், "ரஃபேல் விமானத்தின் விலை, கொள்முதல் நடைமுறை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தவறான தகவல்களை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com