சுடச்சுட

  

  ராஜீவ் சக்ஸேனா அப்ரூவராக மாறினால் ஆட்சேபணை இல்லை: அமலாக்கத்துறை

  By DIN  |   Published on : 14th March 2019 09:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Enforcement_Directorate_logo


  அகஸ்டா வெஸ்ட்லேண்ட் பண மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இடைத்தரகர் ராஜீவ் சக்ஸேனா அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்ததில் ஆட்சேபணை இல்லை என்று அமலாக்கத்துறை தில்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

  ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் ராஜீவ் சக்ஸேனா, அரசுத் தரப்பு சாட்சியாக (அப்ரூவராக) மாற விருப்பம் தெரிவித்து, தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 
  தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், அந்த மனுவை கடந்த மாதம் 28-ஆம் தேதி பரிசீலனை செய்தார். அப்போது, சக்ஸேனாவின் கோரிக்கை குறித்து பதில் அளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

  இதையடுத்து, மார்ச் 8-ஆம் தேதி இந்த விவகாரத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூடுதல் அவகாசம் கேட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு மார்ச் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

  இந்நிலையில், இந்த வழக்கு சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் முன் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜீவ் சக்ஸேனா அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்ததில் எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்தது. இதையடுத்து, இந்த வழக்கு மார்ச் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

  அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து குடியரசுத் தலைவா், பிரதமா் உள்ளிட்ட மிகமுக்கிய பிரமுகா்கள் பயணம் செய்ய 12 அதிநவீன ஹெலிகாப்டா்கள் வாங்க ரூ.3,600 கோடி மதிப்பில் இந்தியா கடந்த 2010-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்கு இந்தியாவைச் சோ்ந்தவா்களுக்கு ரூ.423 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. 
  இதையடுத்து கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அப்போதைய மத்திய அரசு அறிவித்தது.

  இந்த வழக்கில் விமானப்படை முன்னாள் தலைமை தளபதி எஸ்.பி. தியாகி, இடைத்தரகா் கிறிஸ்டியன் மிஷெல், அகஸ்டா வெஸ்ட்லேண்ட், ஃபின்மேகானிகா நிறுவன முன்னாள் இயக்குநா்கள், சக்ஸேனாவின் மனைவி ஷிவானி உள்ளிட்டோா் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்த முறைகேடு வழக்கு தொடா்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai