சுடச்சுட

  

  சுவாமி ஐயப்பன் பெயரை பயன்படுத்தி வாக்கு கேட்கக் கூடாது: அனைத்து கட்சி கூட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்

  By DIN  |   Published on : 14th March 2019 10:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  meena-ram-tika


  வரும் மக்களவைத் தேர்தலில், சுவாமி ஐயப்பன் பெயரை பயன்படுத்தி, வாக்கு கேட்கக் கூடாது என்று கேரளத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரி டிகா ராம் மீனா மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.

  சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-இல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்த, ஆளும் மார்க்சிஸ்ட் கூட்டணி அரசு முடிவு செய்ததைத் தொடர்ந்து, ஐயப்ப பக்தர்களும், ஹிந்து அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜகவும் தீவிர போராட்டத்தை முன்னெடுத்தது.
  இந்நிலையில், மக்களவைத் தேர்தலையொட்டி, கேரளத்தில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி டிகா ராம் மீனா புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். 
  ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த கட்சிகள், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகள்,  பாஜக உள்ளிட்டவை இந்த கூட்டத்தில் பங்கேற்றன. அப்போது, தேர்தல் பிரசாரத்தின்போது, சுவாமி ஐயப்பனின் பெயரை பயன்படுத்தி வாக்கு கேட்கக் கூடாது; மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ராம் மீனா அறிவுறுத்தினார்.
  இதுதொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது:
  சபரிமலை, ஒரு வழிபாட்டுத் தலம். அந்த கோயில் மற்றும் சுவாமி ஐயப்பனின் பெயரை, வாக்குகளுக்காக பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிமீறலாகும். சபரிமலை கோயில் உள்பட எந்த வழிபாட்டு தலங்களின் படத்தையோ, விடியோவையோ பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது. அனைத்து கட்சிகளுக்கும் இது பொருந்தும் என்று ராம் மீனா அறிவுறுத்தினார்.
  இக்கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்பும் நோக்கிலோ, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலோ சபரிமலை விவகாரம் பயன்படுத்தப்பட கூடாது என்பதே தலைமை தேர்தல் அதிகாரியின் அறிவுறுத்தலாகும். அதேசமயம், இந்த விவகாரத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் அரசு மற்றும் காவல்துறையினர் நிலைப்பாடு தொடர்பாக பிரசாரத்தில் பேசுவோம் என்றார்.
  மார்க்சிஸ்ட் சாடல்: இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஏ.ஆனந்தன் கூறுகையில், தேர்தல் பிரசாரத்தில், சபரிமலை விவகாரத்தைத் தவிர, பாஜகவுக்கு வேறெதுவும் பேசுவதற்கு இல்லை. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் தோல்விகளை முன்வைத்து, நாங்கள் பிரசாரம் செய்வோம். நாங்கள் எந்த வழிபாட்டுத் தலங்களுக்கும் எதிரானவர்கள் அல்ல என்றார்.
  காங்கிரஸ் கருத்து: கேரளத்தில் மக்கள் எதிர்கொண்டுள்ள அனைத்து விவகாரங்களையும் பிரசாரத்தில் எழுப்புவோம்; அதேசமயம், தேர்தல் நடத்தை விதிகளை மீற மாட்டோம் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.
  முன்னதாக, தேர்தல் பிரசாரத்தில், சபரிமலை விவகாரத்தை அரசியல் கட்சிகள் எழுப்பக் கூடாது; அவ்வாறு எழுப்புவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராம் மீனா கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது எச்சரித்திருந்தார். 
  அதற்கு, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai