சுடச்சுட

  

  பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது: சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டம்

  By DIN  |   Published on : 14th March 2019 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  susma-swaraj


  தங்கள் மண்ணில் செயல்பட்டுவரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காத வரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
  சர்வதேச அரங்கில் இந்தியா: மத்திய அரசின் வெளியுறவு கொள்கை என்ற தலைப்பில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
  பயங்கரவாதத்தை ஒரு புறம் வைத்துக் கொண்டிருக்கும் நாட்டுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியாது. பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்க வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலாகோட் பகுதியில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக அந்நாடு ஏன் செயல்பட வேண்டும்? அந்த அமைப்புக்காக இந்திய ராணுவத்தின் மீது பாகிஸ்தான் ராணுவம் ஏன் தாக்குதல்  தொடுக்க வேண்டும்?
  அந்த அமைப்புக்கு பாகிஸ்தான்தான் நிதியுதவி அளித்து தங்கள் நாட்டு மண்ணில் வளர்த்தெடுக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தாராள குணம் படைத்தவர், செயல்திறன் மிக்க அரசியல்வாதி என்றால் பயங்கரவாதி மசூத் அஸாரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
  பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால், அந்நாட்டு அரசுடன் நட்பு பாராட்ட இந்தியா தயாராக உள்ளது. இஸ்லாமிய ஒத்துழைப்பு மாநாட்டில் 50 ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்க இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. கடந்த 1969ஆம் ஆண்டில் அந்த மாநாட்டில் பங்கேற்க இந்திய வெளியுறவு அமைச்சர் சென்றபோது, பாகிஸ்தான் எதிர்ப்பை பதிவு செய்தது. ஆனால், தற்போது இந்தியா சார்பில் நான் பங்கேற்றேன். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் இருக்கை காலியாக இருந்தது.
  பல்வேறு நாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்வதால் இந்தியாவுக்கு என்ன கிடைக்கிறது என்று பலர் என்னிடம் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவில்லை என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இந்தப் பயணத்தின் மூலம் நாங்கள் அனைத்து நாடுகளுடனும் நட்பு பாராட்டுகிறோம்.
  இவ்வாறு நட்பு பாராட்டியதால்தான் யேமனில் இருந்து 7,000 பேரை விடுவிக்க முடிந்தது. சர்வதேச நீதிமன்றத்திலும் இந்தியாவுக்கு வலிமை கூடியது. கடந்த 5 ஆண்டுகளில் மொத்தமுள்ள 193 நாடுகளில் 189 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai