சுடச்சுட

  

  பிரதமர் யார்? தேர்தலுக்குப் பின்!: ராகுல் காந்தி திட்டவட்டம்

  By DIN  |   Published on : 14th March 2019 11:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ragul2

  சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி.  உடன் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், 


  பிரதமர் யார் என்பது தேர்தலுக்குப் பின்னர் தான் தெரியவரும். எதிர்க்கட்சிகளில் யார் பிரதமர் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். நாட்டில் உள்ள ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றாக உள்ளன. ஆர்.எஸ்.எஸ்., பாஜகவுக்கு எதிராக அந்தக் கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எனவே, பாஜகவையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும்  வீழ்த்துவதே எங்களது ஒரே பணி என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

  மக்களவைத் தேர்தல் பிரசார பயணமாக புதன்கிழமை தமிழகம் வந்த ராகுல் காந்தி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ராகுல் காந்தி அளித்த பதில்:

   தமிழகம், மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. பிகார், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. கூட்டணி விஷயத்தில், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலைச் சந்திப்பது என்பது  தவறான யோசனையாக இருக்கவில்லை.  
    
  தமிழகம் உள்பட அனைத்து மக்களும் தாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றே கருதுகிறார்கள். அவர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், தனித்து விடப்படவில்லை என்ற உணர்வுடன் இருக்க வேண்டும். கலாசாரமோ அல்லது மொழியோ அச்சத்தின் பிடியில் இருக்கவில்லை என்ற உணர்வுடன் இருக்க வேண்டும்.

  ஜி.எஸ்.டி. விவகாரம்: ஜி.எஸ்.டி.யால் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறோம். எனவே, காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது, ஜி.எஸ்.டி.யில் சீரமைப்புகளைக் கொண்டு வருவோம். மேலும், எளிமையான முறையிலும், குறைந்த அளவிலான வரி விகிதமும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதைச் செய்வோம். வேலைவாய்ப்புகள் அதிகளவு உருவாக்கப்பட வேண்டும். சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையில் அதிகளவு வேலைகள் உருவாக்கித் தரப்பட வேண்டும். இதற்காக வங்கிகளில் கடனுதவிகள் தாராளமாக கிடைக்க நடவடிக்கை வேண்டும்.

  பாஜக ஆட்சியில் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற நடவடிக்கைகளால் குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளன. இந்தப் பாதிப்பில் இருந்து மீள தேர்தல் அறிக்கையில் சிறப்பான யோசனைகளை முன்வைக்கிறோம்.

  புல்வாமா தாக்குதல்:  புல்வாமா தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானைப் பொருத்தவரை எங்கெல்லாம் சந்தர்ப்பங்கள் கிடைக்குமோ அதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளும். இதில் காங்கிரஸ் எழுப்ப விரும்பும் ஒரே கேள்வி. மக்களையும், ராணுவ வீரர்களையும் பாதுகாப்பதில் அரசு என்ன செய்தது? பாகிஸ்தான் குண்டு வீச்சை நிகழ்த்த முடியாத அளவுக்கு என்ன தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்தது? என்ற கேள்விகள் எழுகின்றன. புல்வாமா தாக்குதலுக்கு மசூத் அஸாரே முக்கிய காரணம். அவரை விடுவித்தது பாஜக அரசுதான். அதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் பங்கு உள்ளது.

  நான்கு முக்கிய பிரச்னைகள்: நாட்டில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. இதுபோன்ற பிரச்னைகளைத் தீர்ப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தோல்வி அடைந்து விட்டார். மேக் இன் இந்தியா போன்ற திட்டங்களால் எந்தப் பயனும் இல்லை. விவசாயிகள் பிரச்னை என்பது இரண்டாவதாகும். விவசாயிகளை பாஜக அரசு அவமதித்து வருகிறது.

  மூன்றாவதாக, நமது நாட்டின் அமைப்புகள் மீது  பாஜக அரசு தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியுள்ளது. சிபிஐ இயக்குநர் ஒரே நாள் இரவில் நீக்கப்படுகிறார், ஆர்பிஐ., தலைவர் விலகுகிறார், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கிறார்கள். இவ்வாறு இந்தியாவின் முக்கிய அமைப்புகளின் மீது அரசு தாக்குதல்களை நடத்தியுள்ளது. தமிழ் கலாசாரம், மொழி மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. தமிழகம் உள்பட ஒட்டுமொத்த மாநிலங்களும் இதே உணர்வுடன்தான் இருக்கின்றன. 

  ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் நாட்டை இயக்கக் கூடாது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியான உரிமைகளும், குரல்களும் இருக்கின்றன.

  விவசாயிகள் கடன் ரத்து செய்யப்படும்: தமிழக அரசை தனது ரிமோட் கண்ட்ரோல் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இயக்கி வருகிறார். இது தமிழக மக்களை முற்றிலும் அவமதிக்கும் செயலாகும். தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழக மக்களே தங்களது மாநிலத்தை ஆள வேண்டும். 

  நாங்கள் ஆட்சிக்கு வரும்போது விவசாயிகள் கடன் ரத்து செய்யப்படும். விவசாயமும், விவசாயிகளும் இல்லாமல் நாடு வலிமை பெறாது.

  ரஃபேல் விவகாரம்: ரஃபேல் விவகாரத்தைப் பொருத்தவரை, பிரதமர் ஒரு ஊழல்வாதி. ரஃபேல் விவகாரத்தில் ஒட்டுமொத்த விதிகளையும் அவர் மீறியுள்ளார். ரஃபேல் விமானங்களின் திறனைப் பற்றி நாங்கள் ஒருபோதும் கேள்வி எழுப்பவில்லை. இதில் ஒப்பந்தத்தின் மூலம் நரேந்திர மோடியும், அனில் அம்பானியும் இணைந்து ரூ.30 ஆயிரம் கோடி பலன் பெற்றார்களா என்பதே எங்கள் கேள்வி.  இந்த விஷயத்தில் ஊழல் என்பது தெள்ளத் தெளிவாக இருக்கிறது. உரிய முறையில் விசாரணை நடத்தி இருவரையும் தண்டனைக்கு உள்ளாக்குவோம்.

  யார் பிரதமர்?: எதிர்க்கட்சிகளில் யார் பிரதமர் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். நாட்டில் உள்ள ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றாக உள்ளன. ஆர்.எஸ்.எஸ்., பாஜகவுக்கு எதிராக அந்தக் கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எனவே, பாஜகவையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும்  வீழ்த்துவதே எங்களது ஒரே பணி. அதாவது ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் வேலை என்பது பிரதமர் நரேந்திர மோடியை வீழ்த்துவதுதான். 

  நீட் தேர்வு: நீட் தேர்வைப் பொருத்தவரை தொழில்நுட்ப ரீதியாக அதனை அணுகுவோம். இந்தத் தேர்வின் மூலமாக இளைய தலைமுறையினரிடையே பாகுபாடு காட்டப்படுவதாக கருத்து நிலவுகிறது. எனவே, அந்தப் பிரச்னை தீர்க்கக் கூடியதுதான். கல்விக்காக அதிகளவு செலவிட வேண்டும். 

  உயர் கல்வியைப் பொருத்தவரை சாதகமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும்படி கல்வி அமைப்புகள் வற்புறுத்தப்படுகின்றன. துணைவேந்தர்கள் சித்தாத்த ரீதியாக அமர்த்தப்படுகின்றனர்.  இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

    மூன்று முக்கிய கோஷங்கள்:  

  தமிழகத்தில் திமுகவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். ஆக்கப்பூர்வமான, சக்தி வாய்ந்த கூட்டணியாகத் திகழ்கிறது. எனவே, இந்தத் தேர்தலில் தனித்து களம் இறங்குவது குறித்த கேள்வி எழவில்லை. 

  வேலைவாய்ப்பு, விவசாயிகள் நலன், மகிழ்ச்சியான-ஒருங்கிணைந்த இந்தியா ஆகிய மூன்று முக்கிய அம்சங்களே காங்கிரஸ் கட்சியின் பிரதான தேர்தல் கோஷங்களாக இருக்கும் என்றார் ராகுல் காந்தி.

  செய்தியாளர் சந்திப்பின்போது முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  செய்தியாளர் சந்திப்புக்கு வந்த ராகுல் காந்தியை தென் சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai