ராகுலின் இந்த பேச்சுதான் பாகிஸ்தான் ஊடகங்களில் தலைப்புச் செய்தி: பாஜக பதிலடி

ராகுலின் இந்த பேச்சுதான் பாகிஸ்தான் ஊடகங்களில் தலைப்புச் செய்தி: பாஜக பதிலடி

சீன அதிபரைப் பார்த்து மோடி அச்சப்படுவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் பேசிய பேச்சுக்கு பாஜக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

சீன அதிபரைப் பார்த்து மோடி அச்சப்படுவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் பேசிய பேச்சுக்கு பாஜக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அஸாரை, ஐ.நா. மூலம் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்துக்கு, சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.

கடந்த காலங்களில் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தனக்கு உள்ள "வீட்டோ' அதிகாரத்தின் மூலம் சீனா தடுத்துவிட்டது. இப்போதும் சீனா முட்டுக்கட்டை போட்டிருப்பது இந்தியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பேசிய ராகுல் காந்தி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்திய நடவடிக்கையை சீனா தலையிட்டு தடுத்துள்ளது. பிரதமர் மோடி பலவீனமாக இருப்பதால் சீன அதிபர் ஸி ஸின்பிங்கைப் பார்த்து அஞ்சுகிறார் என்று கூறியிருந்தார்.

இதற்கு மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் பதிலளிக்கையில், சீனாவின் நடவடிக்கையால் இந்தியா துயரம் அடையும் நேரத்தில் எல்லாம் ராகுல் காந்தி கொண்டாட்ட மனநிலைக்குச் செல்வது ஏன்? ராகுலின் இந்த பேச்சுதான் பாகிஸ்தான் ஊடகங்களில் நிச்சயம் தலைப்புச் செய்தியாகும். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் முடிவுகளை எல்லாம் டிவிட்டர் பக்கத்தில் பகிர முடியாது என்றும் தடாலடியாக பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியச் செலவில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் சீனாவுக்கு வீட்டோ அதிகாரத்தைப் பெற்றுக் கொடுத்ததே இந்தியாவின் முதல் பிரதமரும், ராகுலின் தாத்தாவுமான நேருதான். அவர் இல்லையென்றால், இன்று பாதுகாப்புக் கவுன்சிலில் சீனாவுக்கு வீட்டோ அதிகாரமே இருந்திருக்காது என்பதையும் ரவி ஷங்கர் பிரசாத் சுட்டிக் காட்டினார்.

மசூத் அஸார் விவகாரத்தில் சீனாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த முடியாதா, பிறகு, சீன அதிபர் ஸியுடன் படகுச் சாவரி செய்ததால் கிடைத்த நன்மைதான் என்ன? என்றும் ராகுல் காட்டமாகப் பேசியிருந்தார்.

இந்தியாவுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுக்கும் போது, அந்நாட்டு அதிபருக்கு எதிராக மோடியின் வாயில் இருந்து ஒரு வார்த்தைக் கூட வெளியே வராது என்றும் ராகுல் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com