சுடச்சுட

  

  முதலில் ஆவணங்கள் கசிந்த பிரச்னைக்கு தீர்வு: ரஃபேல் வழக்கில் உச்சநீதிமன்றம்

  By DIN  |   Published on : 14th March 2019 06:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  supreme court


  ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், கசிந்த ஆவணங்களை தாக்கல் செய்தமைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் விஷயத்திற்கே முதலில் முடிவு எட்டப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

  ரஃபேல் ஒப்பந்தம் வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. அப்போது, தொடக்கத்தில் அட்டார்னி ஜெனரல் கேகே வேணுகோபால் மத்திய அரசு சார்பில் ஆஜராகி, ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்த ஆவணங்களை பயன்படுத்துவதற்கு தடை கோரினார். மேலும், சம்மந்தப்பட்ட துறையிடம் இருந்து அனுமதி பெறாமல் அந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக் கூடாது என்றார். தேசத்தின் பாதுகாப்பு எல்லாவற்றை காட்டிலும் உயர்ந்தது என்பதால் அது தொடர்பான ஆவணங்களை யாரும் வெளியிடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். இதற்காக சட்டப்பிரிவு 123 மற்றும் ஆர்டிஐ சட்ட விதிமுறையை வேணுகோபால் சுட்டிக்காட்டினார்.  

  மனுதாரரும் வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண், வேணுகோபால் வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில், ரஃபேல் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யக்கூடாது என்று அட்டர்னி ஜெனரல் கூறும் ஆவணங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு பொது தளத்தில் உள்ளது என்றார். மேலும், ஆர்டிஐ சட்ட விதிமுறையின் படி உளவுத்துறை அமைப்புகள் தொடர்பான ஆவணங்களுக்கு மட்டுமே அட்டர்னி ஜெனரல் கூறுவது பொருந்தும் என்றும் அவர் தெரிவித்தார். பிரான்ஸ் உடன் போடப்பட்டுள்ள ரூ. 58,000 கோடி ஒப்பந்தம் இருநாட்டு அரசுகள் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் கிடையாது. அதனால், இறையாண்மைக்கான உத்தரவாதம் இதில் இடம்பெறாது என்றும் பிரசாந்த் பூஷண் தெரிவித்தார். மேலும், இந்திய பத்திரிகை கவுன்சில் சட்டத்தில், பத்திரிகையாளர்களுக்கு தகவல் தெரிவித்தவர்களை பாதுகாக்கவும் விதிகள் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 

  இந்த வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்கே கௌல் மற்றும் கேஎம் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு, "முதலில், கசிந்த ஆவணங்களை தாக்கல் செய்தமைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் விஷயத்தில் முடிவு எட்டப்படும். அதன்பிறகே, வழக்கின் உண்மை தகவல்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விசாரிக்கப்படும்" என்று தெரிவித்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai