மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை 

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அஸாரை, ஐ.நா. மூலம் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்துக்கு, சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.
மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை 


பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அஸாரை, ஐ.நா. மூலம் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்துக்கு, சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.

கடந்த காலங்களில் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தனக்கு உள்ள "வீட்டோ' அதிகாரத்தின் மூலம் சீனா தடுத்துவிட்டது. இப்போதும் சீனா முட்டுக்கட்டை போட்டிருப்பது இந்தியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த மாதம் 14-ஆம் தேதி சிஆர்பிஎஃப் படையினர் பயணித்த வாகனத்தை குறிவைத்து, தற்கொலைப் படை பயங்கரவாதி தாக்குதல் நிகழ்த்தினார். 40 வீரர்களை பலிகொண்ட இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதைத்தொடர்ந்து, அந்த அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரும் தீர்மானத்தை, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ள அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அண்மையில் கொண்டு வந்தன. இந்த தீர்மானம் மீதான எதிர்ப்பை பதிவு செய்வதற்கான காலக்கெடு புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவடையவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் சீனா முட்டுக்கட்டை போட்டது.

அதாவது, அந்த தீர்மானத்தை ஆராய்வதற்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என்று சீனா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. சீனாவில் இந்த நடவடிக்கையால் தீர்மானம் 6 மாதங்கள் வரை நிறுத்திவைக்கப்படும். அதன் பிறகும், இந்த கால அவகாசம் 3 மாதங்கள் வரை நீட்டிக்கப்படலாம்.

இந்தியா அதிருப்தி: மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் நடவடிக்கைக்கு சீனா முட்டுக்கட்டை போட்டிருப்பதற்கு, இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியர்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையவர்களை, நீதியின் முன் நிறுத்த இந்தியா தொடர்ந்து முயற்சிக்கும். மசூத் அஸாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஆதரவளித்த நாடுகளுக்கு இந்தியா சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. 

முன்னதாக, அஸாருக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெறாவிட்டால், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் அமெரிக்கா மற்றும் சீனாவின் முயற்சிகளுக்கு பின்னடைவு ஏற்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித்தொடர்பாளர் ராபர்ட் பல்லாடினோ தெரிவித்தார்.

இந்தியாவில் வெவ்வேறு காலகட்டங்களில், மசூத் அஸாரின் தூண்டுதலின் பேரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல், பதான்கோட் மற்றும் உரியில் உள்ள ராணுவ முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், கடந்த மாதம் 14-ஆம் தேதி புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் உள்ளிட்டவற்றில் மசூத் அஸாருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com