சுடச்சுட

  

  கர்தார்பூர் வழித்தடம்: இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை

  By DIN  |   Published on : 15th March 2019 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kartarpur1

  பாகிஸ்தான் குழுவினருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் மத்திய உள்துறை இணைச் செயலர் எஸ்.சி.எல். தாஸ்.


  புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், பாகிஸ்தானில் அமைந்துள்ள சீக்கிய வழிபாட்டுத் தலத்துக்கு இந்தியாவிலிருந்து சிறப்பு வழித்தடம் அமைப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
  அட்டாரி-வாகா எல்லைப் பகுதியில், இந்தியாவின் அட்டாரி பகுதியில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை இணக்கமான சூழலில் நடைபெற்றதாக இரு தரப்பினரும் தெரிவித்தனர்.
  இதுகுறித்து இந்திய - பாகிஸ்தான் குழுவினர் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
  கர்தார்பூர் வழித்தடம் குறித்து இந்திய - பாகிஸ்தான் இடையிலான முதல்கட்ட பேச்சுவார்த்தை அட்டாரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மிக இணக்கமான சூழலில் நடைபெற்ற அந்தப் பேச்சுவார்த்தையின்போது, பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலத்துக்கு இந்தியாவிலிருந்து யாத்ரீகர்கள் செல்வதற்கு, கர்தார்பூர் வழித்தடம் அமைக்கப்படுவதற்கான நடைமுறைக் கூறுகள் குறித்தும், இதுதொடர்பான ஒப்பந்த வரைவு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
  இதற்கான வரைவு ஒப்பந்தத்தில் இடம் பெற வேண்டிய பல்வேறு அம்சங்கள், கர்தார்பூர் வழித்தடத்தை விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவை 
  குறித்து விரிவாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கர்தார்பூர் வழித்தடம் அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் இருதரப்பு தொழில்நுட்ப நிபுணர்களும் பங்கேற்றனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  விசா இல்லாமல் அனுமதி: இதற்கிடையே, கர்தார்பூர் வழித்தடம் வழியாக இந்தியர்கள் பாகிஸ்தான் செல்வதற்கு நுழைவு இசைவு (விசா) இல்லாத அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று பேச்சுவார்த்தையின்போது இந்திய அதிகாரிகள் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
  பாகிஸ்தான் மகிழ்ச்சி: இந்தப் பேச்சுவார்த்தை குறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் வெளியிட்டுள்ள பதிவில், எங்களது குழுவினர் கர்தார்பூர் வழித்தடம் குறித்து இந்தியாவுடன் இணக்கமான சூழலில் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நீண்ட காலம் கழித்து இந்தியாவும் - பாகிஸ்தானும் இணைந்து முதல் முறையாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
  முகமது ஃபைசல் தலைமையில்தான் பாகிஸ்தான் குழுவினர் கர்தார்பூர் வழித்தட பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை, பாகிஸ்தானின் வாகா பகுதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக்கின் சமாதி பாகிஸ்தானின் கர்தார்பூரில் அமைந்துள்ளது. சீக்கியர்களின் புனிதத் தலமான அங்கு இந்தியர்கள் சென்று வருவதற்கான சிறப்பு வழித்தடத்தை அமைக்க இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த ஆண்டு ஒப்புக் கொண்டன.
  அந்த வழித்தடத்தை அமைப்பதற்காக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி அடிக்கல் நாட்டினர். இரண்டு நாள்கள் கழித்து, பாகிஸ்தானில் அந்த நாட்டுப் பிரதமர் இம்ரான் கானும் அதற்காக அடிக்கல் நாட்டினார்.
  இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு கடந்த மாதம் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் உயிரிழந்ததற்கும், அதற்குப் பதிலடியாக பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதற்கும் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.
  இந்தச் சூழலிலும், இரு நாடுகளுக்கும் இடையே கர்தார்பூர் வழித்தட பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai