சுடச்சுட

  

  தேசத்தின் வேதனையை ராகுல் காந்தி கொண்டாடுவது ஏன்? பாஜக பதிலடி

  By DIN  |   Published on : 15th March 2019 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ravisankar-prasad


  நாடு வேதனை அடையும் சமயங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொண்டாட்ட மனநிலைக்கு செல்வது ஏன்? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
  ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் ஐ.நா. தீர்மானத்திற்கு சீனா முட்டுக்கட்டை போட்டது தொடர்பாக ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்தற்கு பாஜக இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளது.
  முன்னதாக, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை கண்டு பிரதமர் மோடி அச்சம் கொண்டுள்ளதாகவும், சீனா இந்தியாவுக்கு எதிராக செயல்படும்போது ஒரு வார்த்தைக்கூட பேசுவதில்லை என்றும் ராகுல் காந்தி கூறியிருந்தார்.
  இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், செய்தியாளர்களைச் சந்தித்து,  ராகுலின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது:
  சீனாவின் நடத்தைகளால் இந்தியாவின் நிலைப்பாடு தோல்வி அடைந்துள்ள சமயத்தில் ராகுல் காந்தி மட்டும் கொண்டாட்ட மனநிலையில் இருப்பது ஏன்? 
  சுட்டுரையில் நீங்கள் தெரிவித்த கருத்தை ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தின் அலுவலகத்தில் உற்சாகத்துடன் பார்த்திருப்பார்கள். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், இன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடுதான் என்ன? மிகுந்த வலியோடு இதைக் கேட்க விரும்புகிறோம்.
  ராகுல் காந்தியின் சுட்டுரைப் பதிவு பாகிஸ்தானில் தலைப்புச் செய்தியாக இருந்திருக்கும். பாகிஸ்தானில் செய்தி வெளியாவது கண்டு நீங்கள் மகிழ்ச்சி அடையளாம்.
  உங்கள் கருத்துப்படி சீனாவுடன் நீங்கள் நெருங்கிய நட்புறவில் இருப்பதாகத் தெரிகிறது. மானசரோவருக்கு புனிதப் பயணம் மேற்கொண்டபோது, சீன அதிகாரிகளுடன் நல்லுறவில் இருப்பதாகத் தெரிவித்தது நீங்கள்தான்.  
  ராகுலுக்கு சீனாவுடன் நல்லுறவு இருக்குமெனில், அதன் மூலமாக நாடு ஏன் பலன் அடையக் கூடாது? மசூத் அசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சீனாவை ஏன் அவர் வலியுறுத்தக் கூடாது?
  ராகுலுக்கு அறிவுரை தேவை: வெளியுறவுக் கொள்கை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். அதை சுட்டுரையில் விவரித்துவிட முடியாது. காங்கிரஸ் கட்சி நாட்டை 55 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறது. ஆகவே, வெளியுறவுக் கொள்கை என்றால் என்னவென்று மிகச் சரியான அறிவுரையை ராகுல் காந்திக்கு அக்கட்சி வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். பொதுவாக, வெளியுறவுக் கொள்கையை பொருத்தமட்டில், அனைத்து அரசியல் கட்சிகளுக்குமே ஓர் எல்லை உண்டு என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai