அணுமின் நிலையங்கள் தொடர்பாக  வாஷிங்டனில்  பேச்சுவார்த்தை நடத்திய இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலே, அமெரிக்க ஆயுதக் கட்டுப்பாட்டு துணை அமைச்சர் ஆண்ட்ரியா தாம்ஸன்.
அணுமின் நிலையங்கள் தொடர்பாக  வாஷிங்டனில்  பேச்சுவார்த்தை நடத்திய இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலே, அமெரிக்க ஆயுதக் கட்டுப்பாட்டு துணை அமைச்சர் ஆண்ட்ரியா தாம்ஸன்.

6 புதிய அணுமின் நிலையங்கள்: அமெரிக்கா - இந்தியா முடிவு

அமெரிக்காவின் உதவியுடன் 6 புதிய அணுமின் நிலையங்களை அமைப்பதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது.


அமெரிக்காவின் உதவியுடன் 6 புதிய அணுமின் நிலையங்களை அமைப்பதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது.
அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா இணைவதற்கு ஆதரவு அளிப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலே மற்றும் அமெரிக்க ஆயுதக் கட்டுப்பாட்டு துணை அமைச்சர் ஆண்ட்ரியா தாம்ஸன் ஆகியோர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. 
தில்லி உள்பட இந்தியாவின் பல நகரங்கள், காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் பயன்பாட்டைப் பெருமளவில் குறைக்க இந்தியா முயற்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் அணுமின் உற்பத்தித் திறனை மூன்று மடங்கு அதிகரிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது. 
இந்நிலையில், இந்தியா- அமெரிக்கா  இடையே பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம், வாஷிங்டனில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், விஜய் கோகலே, ஆண்ட்ரியா தாம்ஸன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டம் தொடர்பாக, இருதரப்பு சார்பிலும் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்தவும், அணுசக்தி ஒத்துழைப்பை அதிகரிக்கவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அமெரிக்காவின் துணையுடன் இந்தியாவில் புதிதாக 6 அணுமின் நிலையங்களை அமைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 
அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் இந்தியா இணைவதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும்.
உலக நிகழ்வுகள் குறித்தும், உலக நாடுகளின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாகவும், அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  பேரழிவுகளை ஏற்படுத்தவல்ல அணு ஆயுதங்கள் விநியோகிக்கப்படுவதைத் தடுக்க இரு நாடுகளும் உறுதிபூண்டன. பயங்கரவாதிகளுக்கும், அரசுக்கு எதிரானவர்களுக்கும் அத்தகைய ஆயுதங்கள் சென்றடையாமல் இருக்கவும் இருநாடுகளும் ஒப்புக்கொண்டன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீண்ட காலத் தடை: 6 புதிய அணுமின் நிலையங்கள் அமையவுள்ள இடங்கள் குறித்தும், இத்திட்டம் நிறைவேற உள்ள கால வரையறை குறித்தும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. அமெரிக்காவின் அணு உலையை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாகக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அணு உலைகள் பரிமாற்றத்தைப் பொருத்தவரை, அதில் விபத்துகள் ஏதும் ஏற்பட்டால், அதற்கான இழப்பீட்டுச் செலவுகளை அந்த அணு உலைகளைப் பயன்படுத்தி வந்த நாடே ஏற்க வேண்டும் என்று சர்வதேச விதிகள் தெரிவிக்கின்றன. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விபத்துக்கான இழப்பீட்டுச் செலவுகளை அணு உலைகளைத் தயாரித்த நாடே ஏற்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வந்தது. இதன் காரணமாகவே, இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுப்பதற்கு இத்தனை ஆண்டுகள் தாமதம் ஆகியுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அணுசக்தி ஒப்பந்தம்: இந்தியா-அமெரிக்கா இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அணுசக்தி ஒப்பந்தம், கடந்த 2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கையெழுத்தானது. அணு ஆயுதங்கள் விநியோகிக்கப்படுவதைத் தடை செய்யும், அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் உறுப்பினராக இல்லாத இந்தியாவுக்கு சில சலுகைகளை வழங்க இந்த ஒப்பந்தம் வழிகோலியது. இதையடுத்து, ரஷியா, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, இலங்கை, பிரிட்டன், ஜப்பான், வியத்நாம், வங்கதேசம், கஜகஸ்தான், தென்கொரியா, ஆர்ஜென்டீனா உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவுடன் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டன.
48 நாடுகளைக் கொண்ட அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் இந்தியா இணைவதற்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக அந்தக் கூட்டமைப்பில் இந்தியா இணைவதில் பெரும் தடை நிலவி வருகிறது.
நிலுவையில் உள்ள திட்டம்: ஆந்திரப் பிரதேசத்தில் 6 அணு உலைகளை அமைக்கக் கடந்த 2016-ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இத்திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது. 
இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய அமெரிக்காவைச் சேர்ந்த வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம், கடந்த 2017-ஆம் ஆண்டு திவாலானதைத் தொடர்ந்து, இத்திட்டம் நிலுவையில் உள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்தபோது, அந்நாட்டின் 6 புதிய அணு உலைகளை இந்தியாவில் அமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com