ரஃபேல் விவகாரம்: மத்திய அரசின் ஆட்சேபம் மீது முதலில் முடிவு

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில், மத்திய அரசின் ஆட்சேபம் மீது முதலில் முடிவு செய்தபிறகு, மறுஆய்வு
ரஃபேல் விவகாரம்: மத்திய அரசின் ஆட்சேபம் மீது முதலில் முடிவு


ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில், மத்திய அரசின் ஆட்சேபம் மீது முதலில் முடிவு செய்தபிறகு, மறுஆய்வு மனுக்கள் கருத்தில் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸுடன் இந்தியா மேற்கொண்ட ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி, பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று தீர்ப்பளித்திருந்தது.
இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கெளல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால், பிரான்ஸுடன் மேற்கொள்ளப்பட்ட ரஃபேல் ஒப்பந்தம், தனித்தன்மை கொண்டது. இந்திய ஆதாரங்கள் சட்டத்தின் 123-ஆவது பிரிவின்படி, அதனைத் தகுந்த அமைச்சகத்தின் அனுமதியின்றி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது. 
தகவல் அறியும் உரிமைச் சட்டமும் இதனை உறுதிசெய்கிறது. நாட்டின் பாதுகாப்புக்குப் பாதிப்பு அளிக்கும் வகையிலான ஆவணங்களை ஆதாரங்களாக யாரும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது. அனைத்தையும் விட நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என்று வாதாடினார்.
இதையடுத்து, மனுதாரர்களில் ஒருவரான வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், அரசு தலைமை வழக்குரைஞர் குறிப்பிடும் தனித்தன்மை வாய்ந்த ஆவணங்கள் அனைத்தும் ஏற்கெனவே பொதுவெளியில் வெளியிடப்பட்டுவிட்டன. புலனாய்வு அமைப்புகளின் ஆவணங்களைத் தவிர மற்ற ஆவணங்கள் எதுவும் தனித்தன்மை வாய்ந்தது இல்லை என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டமும் உறுதி செய்துள்ளது என்று வாதத்தை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில், மத்திய அரசின் ஆட்சேபம் மீது முதலில் முடிவு எடுக்கப்பட்டபிறகு, மறுஆய்வு மனுக்கள் கருத்தில் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com