சுடச்சுட

  

  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் திட்டம்: ராகுல் உறுதி

  By DIN  |   Published on : 16th March 2019 04:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Rahul_Gandhi


  காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் திட்டம் உறுதி செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி டேராடூன் பிரசாரத்தில் தெரிவித்தார். 

  மக்களவைத் தேர்தல் அறிவிப்புகள் வெளியானதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம், கேரளா என தொடர்ச்சியாக தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த வரிசையில் இன்று (சனிக்கிழமை) உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.

  அப்போது பேசிய அவர், 

  "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குறிப்பிட்ட அளவின் கீழ் வருமானம் பெறுபவர்களுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதி செய்யப்படும். அந்த தொகை அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால், உலகிலேயே இதை அமல்படுத்தும் முதல் நாடு இந்தியாவாகத் தான் இருக்கும்" என்றார். 

  உத்தரகண்ட் மாநில முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பிசி கந்தூரியின் மகன் மணீஷ் கந்தூரி காங்கிரஸில் இணைந்தார். இதுகுறித்து பேசிய ராகுல், 

  "அவர் ஏன் தற்போது காங்கிரஸில் உள்ளார் என்று சொல்கிறேன். அவருடைய தந்தை குறித்து உங்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் நாடாளுமன்ற பாதுகாப்புத் துறை குழு தலைவர். ஆனால், நாடாளுமன்றத்தில் தேசிய பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பினாலோ, ராணுவத்துக்கு அரசு உதவ வேண்டும் என்ற உண்மையை பேசினாலோ அதற்கு இடமில்லை. பிறகு, அவர் நாடாளுமன்ற பாதுகாப்புத் துறை குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்" என்றார். 

  இந்த பிரசாரத்தில் புல்வாமா தாக்குதல் விவகாரம் குறித்து பிரதமர் மோடியை தாக்கியும் ராகுல் காந்தி பேசினார்.      

  "புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட போது, கார்பெட் தேசிய பூங்காவில் பிரதமர் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார்" என்றார்.  

  17-ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி மே 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai