சுடச்சுட

  

  அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு: சிறையில் கிறிஸ்டியன் மிஷெலுக்கு சித்திரவதை? சிசிடிவி பதிவுகளை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

  By DIN  |   Published on : 17th March 2019 01:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  chrish

  அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள இடைத் தரகர் கிறிஸ்டியன் மிஷெல் சிறையில் சித்திரவதைக்குள்ளாப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, சிறையின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
   இதுகுறித்து திகார் சிறை அதிகாரிகளுக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், 7-ஆம் எண் கொண்ட சிறையில் கடந்த மாதம் 13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரையிலான சிசிடிவி பதிவுகளைச் சமர்ப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
   அந்தச் சிறையில்தான் கிறிஸ்டியன் மிஷெல் கடந்த மாதம் அடைக்கப்பட்டிருந்தார்.
   முன்னதாக, திகார் சிறையில் தாம் துன்புறுத்தப்படுவதாகவும், தமது பக்கத்துச் சிறையில் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் போன்றவர்கள் அடைக்கப்பட்டுள்ளதால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் நீதிமன்றத்தில் கிறிஸ்டியன் மிஷெல் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.
   சிறையில் தாம் துன்புறுத்தப்பட்டதாக மிஷெல் தெரிவிக்கும் குற்றச்சாட்டை சிறை அதிகாரிகள் மறுத்து வரும் நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் அமலாக்கப் பிரிவின் சார்பில் அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் டி.பி. சிங் மற்றும் என்.கே. மட்டா ஆஜராகி வாதிட்டனர்.
   கிறிஸ்டியன் மிஷெல் வெளிநாட்டினர் என்பதாலும், அவர் நாடு கடத்தும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதால் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.
   இந்த நிலையில், கிறிஸ்டியன் மிஷெல் கடந்த மாதம் அடைக்கப்பட்டிருந்த சிறையின் சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்குமாறு தற்போது நீதிபதி அரவிந்த் குமார் தற்போது உத்தரவிட்டுள்ளார்.
   விவிஐபி-க்கள் பயணம் செய்வதற்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து ரூ.3,600 கோடி செலவில் ஹெலிகாப்டர்களை வாங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக நடைபெற்று வரும் வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பும், அமலாக்கத் துறையும் விசாரித்து வருகிறது.
   அந்த ஹெலிகாப்டர் கொள்முதலில் இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்படும் கிறிஸ்டியன் மிஷெலை அமலாக்கத் துறையினர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி துபையில் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வந்தனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai