சுடச்சுட

  

  ஆந்திரம்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இணைந்தார் தெலுங்கு தேசம் முன்னாள் அமைச்சர்

  By DIN  |   Published on : 17th March 2019 02:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அதலா பிரபாகர் ரெட்டி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சனிக்கிழமை இணைந்தார். அதலா பிரபாகர் ரெட்டியின் இந்த முடிவு தெலுங்கு தேசம் கட்சியை அதிர்ச்சியுறச் செய்துள்ளது.
   175 தொகுதிகளைக் கொண்டுள்ள ஆந்திர சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக, 125 பேர் அடங்கிய முதலாவது வேட்பாளர் பட்டியலை தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை வெளியிட்டார். அதில், நெல்லூர்(ஊரக) தொகுதி, அதிலா பிரபாகர் ரெட்டிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சனிக்கிழமை இணைந்தார்.
   இதுதொடர்பாக பிரபாகர் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், " இத்தனை நாள்களாக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேராததற்காக வருத்தப்படுகிறேன். ஜெகன் மோகன் ரெட்டியை, ஆந்திரத்தின் முதல்வராக்குவதே எனது லட்சியம்' என்றார்.
   ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் பிரபாகர் ரெட்டி வெள்ளிக்கிழமையே இணைவதாக இருந்தது. ஜெகன் மோகனின் உறவினர் மர்மமான முறையில் வெள்ளிக்கிழமை இறந்ததையடுத்து, அந்த சூழலில் பிரபாகர் ரெட்டியால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இணைய முடியவில்லை. அதனால், பிரபாகர் ரெட்டி சனிக்கிழமை ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இணைந்தார்.
   இதனிடையே, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராமசந்திரபுரம் தொகுதியின் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் தோட்டா திரிமூர்த்தலு ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இருந்து தெலுங்கு தேசம் கட்சிக்கு சென்ற கர்னூல் எம்.பி. பட்டா ரேணுகா, மீண்டும் சொந்த கட்சிக்கு திரும்பவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai