சுடச்சுட

  
  ALKALAMBA_aamaathmi

  சாந்தினி செளக் சட்டப்பேரவை ஆம் ஆத்மி உறுப்பினரான அல்கா லம்பா, அக்கட்சியிலிருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
   தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு அல்கா லம்பா பதில் அளிக்கையில், காங்கிரஸ் கட்சி தன்னை அணுகினால், அக்கட்சியில் சேர்வது குறித்துப் பரிசீலிப்பேன் என்றும், அந்த வாய்ப்பைத் தவற விட மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்.
   மேலும், பாஜகவைத் தோற்கடிக்க தில்லியில் காங்கிரஸும், ஆம் ஆத்மி கட்சியும் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும், இது குறித்து இரண்டு நாள்களில் முடிவு தெரியும் என்றும் கூறியிருந்தார்.
   அவர் மேலும் கூறுகையில், "காங்கிரஸ் கட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துள்ளேன். அந்தக் கட்சி நல்லதையே செய்து வருகிறது. தேசிய அளவில் பாஜகவைத் தோற்கடிக்க இதுவே நல்ல தருணம்' என்றார்.
   இதைத் தொடர்ந்து, ஏற்கெனவே ஆம் ஆத்மி கட்சி மீது அதிருப்தியில் உள்ள அல்கா லம்பா, அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று தலைநகர் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.
   முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தில்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு அல்கா லம்பா கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும், கடந்த டிசம்பரில் அவர் தனது சுட்டுரையில், "இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தரும்படி ஆம் ஆத்மி கட்சி தலைமை வலியுறுத்தியது.
   ஆனால், நான் மறுத்துவிட்டேன். மேலும், இதற்காக கட்சி எந்த நடவடிக்கை எடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.
   கடந்த சில நாள்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தான் காங்கிரஸ் கட்சிக்கு மாறவுள்ளதாகக் கூறி ஆம் ஆத்மி கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக புகார் தெரிவித்திருந்தார்.
   அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேர்வதற்கு முன்பாக, காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
   ஆம் ஆத்மி கருத்து
   இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் செளரவ் பரத்வாஜ் கூறுகையில், "அல்கா லம்பா ஆம் ஆத்மியிலிருந்து விலகி எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் அவரது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். அப்படி, எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றால் நிறைய தைரியம் வேண்டும்.
   அவர் தொழில்முறை அரசியல்வாதி. காங்கிரஸ் கட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர். காங்கிரஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துதான் கட்சியிலிருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்தார். அவர் உள்பட கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 67 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும் அரவிந்த் கேஜரிவால் மீதான மக்களின் நம்பிக்கையால் கிடைத்த வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர்கள்.
   அவர் எந்தக் கட்சிக்கு சென்றாலும், அந்தக் கட்சியின் ஒழுக்க நெறிகள், கொள்களைக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும்' என்றார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai