சுடச்சுட

  
  yogi

  பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசத்தால், மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
   மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக பிடிஐ செய்தியாளருக்கு அவர் சனிக்கிழமை பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
   மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், பிரியங்கா காந்தியை கட்சியின் பொதுச் செயலாளராக, காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது. கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
   இதற்கு முன்புகூட காங்கிரஸ் கட்சிக்காக, பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டார். அதனால், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதுபோல இந்த முறையும் அவரது பிரசாரத்தால், பாஜகவின் வெற்றிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மாநிலத்தில் பாஜகவை எதிர்கொள்வதற்காக, சமாஜவாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலைச் சந்திக்கின்றன. அந்தக் கூட்டணி ஏற்கெனவே குழப்பத்தில் உள்ளது. அந்தக் கூட்டணியாலும் பாஜகவின் வெற்றிக்கு பாதிப்பு எதுவும் நிகழ்ந்துவிடாது.
   இந்த நாடு, யாருடைய கரங்களில் இருக்கும்போது, பாதுகாப்பானதாகவும், வளர்ச்சி நிறைந்ததாகவும் இருக்கிறதோ, அந்த வேட்பாளருக்கும், அவர் சார்ந்த கட்சிக்கும் மக்கள் வாக்களிப்பர். ஆனால், தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள்.
   வரும் மக்களவைத் தேர்தலில், பாஜகவுக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றி பெறும்.
   பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது, பிரதமர் நரேந்திர மோடியின் துணிச்சல் மிக்க நடவடிக்கைகளில் ஒன்றாகும். அது, நாட்டு நலனுக்கு அவசியமானதும் கூட. இந்த நடவடிக்கையில் இருந்து திறமையும், தகுதியும் கொண்ட தலைமை (பிரதமர் மோடி) இருப்பது தெரியவருகிறது.
   இதற்கு முன்பு சாத்தியமில்லாத விஷயங்கள், பிரதமர் மோடியின் ஆட்சியில் சாத்தியமாகியுள்ளன என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai