சுடச்சுட

  
  susma

  வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடான மாலத்தீவுக்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) செல்கிறார்.
   இந்தச் சுற்றுப்பயணத்தின்போது, அந்நாட்டின் அதிபர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோரைச் சந்திக்கும் சுஷ்மா ஸ்வராஜ், இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அவர்களுடன் விவாதிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
   இந்தச் சுற்றுப்பயணம் குறித்து, வெளியுறவுத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
   மாலத்தீவுகளுடன் இந்தியா நல்லுறவைக் கொண்டுள்ளது. இந்த நல்லுறவையும், ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் விதமாக, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின்போது, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா சாஹிப், பாதுகாப்பு அமைச்சர் மரியா அகமது தீதி, நிதியமைச்சர் இப்ராஹிம் அமீர், திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு அமைச்சர் முகமது அஸ்லாம், சாலை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஐசத் நகுலா, பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் பையஸ் இஸ்மாயில் உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேச உள்ளார்.
   மாலத்தீவுகளுடன் இந்தியா நெருங்கிய நட்புறவைக் கொண்டுள்ளது. அந்த நட்புறவானது நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை, பரஸ்பர புரிதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் இந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அந்நாட்டு அமைச்சர்களுடன் சுஷ்மா ஸ்வராஜ் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
   முதல் அரசுமுறைப் பயணம்: மாலத்தீவு அதிபராக இப்ராஹிம் முகமது சோலி கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற பிறகு, இந்தியா சார்பில் அந்நாட்டுக்கு மேற்கொள்ளப்படும் முதல் அரசுமுறைப் பயணம் இதுவாகும். முன்னதாக, முகமது சோலி அதிபராகப் பதவியேற்கும்போது, பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார். எனினும், பதவியேற்பு விழாவில் மட்டுமே கலந்துகொண்ட அவர், அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.
   மாலத்தீவுக்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) சென்றடையும் சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டு மக்களவைத் தலைவர் காசிம் இப்ராஹிமுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர், அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் முகமது சோலியுடன் திங்கள்கிழமை (மார்ச் 18) பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
   இந்தியாவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், சுஷ்மா ஸ்வராஜ் மேற்கொள்ளும் இந்தப் பயணம், முந்தைய அதிபர் அப்துல்லா யாமீன் ஆட்சியில் இருநாடுகளுக்கும் இடையே பலவீனம் அடைந்த நல்லுறவை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அமையும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai