சுடச்சுட

  

  3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

  By நமது நிருபர், புது தில்லி,  |   Published on : 17th March 2019 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் அரவக்குறிச்சி உள்பட காலியாகவுள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக சனிக்கிழமை மனு அளித்தது.
   தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகள் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளதால், தற்போது தேர்தல் நடத்த முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.
   மேலும், 21 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தினால், அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதாலேயே இதுபோன்ற முடிவை தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் எடுத்துள்ளதாக திமுக குற்றம்சாட்டியது. காலியாகவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக அண்மையில் மனு அளித்திருந்தது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் திமுக வழக்குத் தொடுத்திருந்தது. இதனிடையே, திமுக தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இரண்டு வாரங்களில் விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
   இந்நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி ஆகியோர் அடங்கிய குழு சனிக்கிழமை சென்றது. அங்கு அவர்கள் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை சந்தித்து மனு அளித்தனர்.
   பின்னர் செய்தியாளர்களிடம் திருச்சி சிவா பேசுகையில், "எங்களது மனுவுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் 16 நாள்கள் அவகாசம் கேட்டுள்ளது. இதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், அதற்குள் மனுத் தாக்கல் செய்யும் நாள் முடிவடைந்துவிடும் என்பதை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் சுட்டிக் காட்டினோம். அப்போது, உச்சநீதிமன்றத்தில் தங்களது கருத்தை விரைவில் தெரிவிப்பதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் உறுதியளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் உச்சமன்றத்தில் விரைவில் பதிலளிக்குமென நம்புகிறோம்' என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai