தேர்தல் முன்னேற்பாடுகள்: மேற்கு வங்கத்தில் ஆலோசனைக் கூட்டம்

மக்களவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, மேற்கு வங்கத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் துணை தேர்தல் ஆணையர்

மக்களவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, மேற்கு வங்கத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் துணை தேர்தல் ஆணையர் சுதீப் ஜெயின் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
 42 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நேர்மையான மற்றும் சுமூகமான முறையில் தேர்தல் நடைபெறுவதற்கு, அந்த மாநிலத்தை பதற்றம் மிகுந்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா ஆகியோர் கடந்த புதன்கிழமை வலியுறுத்தினர்.
 அதையடுத்து, மாநிலத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, மாநில தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோரிடம் துணை தேர்தல் ஆணையர் சுதீப் ஜெயின் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
 பாஜக சார்பாக, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஜெய்பிரகாஷ் மஜும்தார், சிசிர் பஜோரியா, முகுல் ராய் ஆகியோர் தேர்தல் ஆணையரைச் சந்தித்தனர்.
 அப்போது, மேற்கு வங்கத்தில் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற வேண்டுமெனில், வாக்குச் சாவடிகளில் மாநில காவல் துறையினர் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்படக்கூடாது என்றும், மேற்கு வங்கம் பதற்றம் மிகுந்த மாநிலம் என்று முந்தைய தேர்தல்களின்போது முதல்வர் மம்தா பானர்ஜியே தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார் என்றும் கூறினர். அதற்கான ஆதாரத்தையும் அவர்கள் சமர்ப்பித்தனர்.
 பாஜகவின் நாடகம்: ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பார்த்தா சட்டர்ஜி கூறுகையில், "மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு எவ்வித செல்வாக்கும் கிடையாது. அவர்களது பலவீனத்தை மறைப்பதற்காக, மாநிலத்தில் பதற்றம் நிலவுவதாக தேர்தல் ஆணையத்திடம் பொய் கூறியுள்ளனர்' என்றார்.
 பாரபட்சம் கூடாது: காங்கிரஸ் சார்பில் பிரதாப் பட்டாசார்யா தேர்தல் ஆணையரை சந்தித்தார். அப்போது, "மாநிலத்தில் உள்ள வாக்குச் சாவடிகள் அனைத்தையும் பதற்றம் மிக்கவை என்று அறிவிக்க வேண்டும். நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இதில் தேர்தல் ஆணையம், எந்த கட்சிகளிடத்திலும் பாரபட்சம் பார்க்கக் கூடாது. வாக்கு எண்ணப்படும் நாளில் அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்' என்று தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்தினார்.
 இதனிடையே, கொல்கத்தா, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானா மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக எல்லைப் பாதுகாப்பு படையின் 1000 வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com