ரஃபேல்: ஜேபிசியை ஏற்காதது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

ரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜேபிசி) விசாரணையை பாஜக ஏற்காதது ஏன்? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
ரஃபேல்: ஜேபிசியை ஏற்காதது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

ரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜேபிசி) விசாரணையை பாஜக ஏற்காதது ஏன்? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். இதன்மூலம் பாஜகவிடம் உண்மைக்கு இடமில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
 உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்து, ராகுல் காந்தி பேசியதாவது:
 புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்த செய்தியை அறிந்ததும், நான் பங்கேற்பதாக இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தேன்.
 ஆனால், அப்போது, பிரதமர் மோடி என்ன செய்துகொண்டிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு ஆவணப்படத்துக்காக கேமராவுக்கு முன்பு நின்றுகொண்டிருந்தார் மோடி. ஏறக்குறைய மூன்றரை மணி நேரம் ஆவணப்படத்துக்காக நேரத்தை செலவிட்டார்.
 அப்படிப்பட்ட நபர் இன்னமும் தேசப்பற்று குறித்து பேசி வருவது வியப்பளிக்கிறது.
 ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான அனில் அம்பானிக்கு சாதகமாக மோடி செயல்பட்டார்.
 அனில் அம்பானியால் போர் விமானத்தை தயாரிக்க முடியுமா? இருப்பினும், சுமார் ரூ.30,000 கோடி மதிப்பிலான போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆலோசனைக்காக பிரான்ஸýக்கு சென்ற அதிகாரிகள் குழுவுடன், அனில் அம்பானியையும் மோடி அழைத்துச் சென்றது ஏன்? ரஃபேல் விவகாரம் தொடர்பாக 4 கேள்விகளை எழுப்பியிருந்தேன். ஆனால், நாடாளுமன்றத்தில் மணிக்கணக்கில் மோடி உரை நிகழ்த்தியிருந்தாலும், நான் கேட்ட ஒரு கேள்விக்குக் கூட பதிலளிக்கவில்லை.
 ரஃபேல் ஒப்பந்த விவகாரம் பிரதமர் மோடியின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்றது என்று பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்தபோது மனோகர் பாரிக்கர் தெரிவித்திருந்தார்.
 வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு அதனைத் திருப்பி செலுத்தாத தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோரை பாஜக அரசு பாதுகாத்தது. நாட்டைவிட்டு தப்பிச் செல்வதற்கு முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை விஜய் மல்லையா சந்தித்து பேசியது வெட்கக் கேடானது.
 மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முன்பு நாங்கள் அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றினோம்.
 மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவோம் என்றார் ராகுல் காந்தி.
 "முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஒரு ரஃபேல் போர் விமானம் சுமார் ரூ.526 கோடிக்கு மதிப்பிடப்பட்டிருந்தது. பாஜக அரசின் ஆட்சிக் காலத்தில் அந்த போர் விமானத்தின் விலை சுமார் ரூ.1,600 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என்று ராகுல் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான புவன் சந்திர கந்தூரியின் மகன் மணீஷ் கந்தூரி, டேராடூனில் ராகுல் முன்னிலையில் காங்கிரஸில் சனிக்கிழமை இணைந்தார்.
 இதுகுறித்து ராகுல் கூறுகையில், "நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவின் தலைவராக பதவி வகித்தவர் புவன் சந்திர கந்தூரி. அவர் தனது வாழ்நாள் முழுவதையும் நாட்டுக்காகவும், பாதுகாப்புப் படைக்காகவும் அர்ப்பணித்தார்.
 தேசப் பாதுகாப்பு குறித்தும், ராணுவத்துக்கு மத்திய அரசு செய்ய வேண்டிய உதவி குறித்தும் புவன் சந்திர கந்தூரி கேள்வி எழுப்பியதால் அப்பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
 ரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாரணைக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு அஞ்சுகிறது. இதன்மூலம், உண்மைக்கு பாஜகவில் இடமில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
 ரஃபேல் விவகாரத்தை விசாரிக்க முனைப்புடன் இருந்த சிபிஐ தலைவர் அலோக் வர்மாவையும் அந்தப் பொறுப்பிலிருந்து நள்ளிரவு 1.30 மணிக்கு நீக்கினார் மோடி' என்றார். ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் "டஸால்ட் ஏவியேஷன்' நிறுவனத்துடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com