வேட்பாளர்கள் தேர்வில் அதிருப்தி: கட்சி மாறும் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள்

திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) வேட்பாளர்கள் தேர்வில் அதிருப்தி தெரிவித்து வரும் அக்கட்சி உறுப்பினர்கள், பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு அணி மாறுவது அதிகரித்து வருகிறது.

திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) வேட்பாளர்கள் தேர்வில் அதிருப்தி தெரிவித்து வரும் அக்கட்சி உறுப்பினர்கள், பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு அணி மாறுவது அதிகரித்து வருகிறது.
 மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அண்மையில் வெளியிட்டார். 42 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலில், தற்போதைய மக்களவை உறுப்பினர்கள் 10 பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. 18 புதுமுகங்களுக்கு மம்தா வாய்ப்பளித்துள்ளார்.
 ஏற்கெனவே, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியில், அக்கட்சி மக்களவை உறுப்பினர்கள் சுமித்ரா கான், அனுபம் ஹஸ்ரா, நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த அர்ஜுன் சிங் ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் பலர், ஓரிரு நாளில் பாஜகவில் இணையவுள்ளதாக அக்கட்சியின் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 டிஎம்சி கட்சியிலிருந்து விலகி, அண்மையில் பாஜகவில் இணைந்த முகுல் ராய், ""திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் உள்ள அதிருப்தி தலைவர்கள், விரைவில் பாஜகவில் இணையவுள்ளனர்'' என்றார்.
 பாலூர்காட் தொகுதியின் எம்.பி. அர்பிதா கோஷுக்குத் தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதற்கு திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் விப்லப் மித்ரா வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
 கூச்பெஹார் எம்.பி.யான பார்த்தா பிரதிம் ரேவுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டு, கடந்த ஆண்டு திரிணமூல் கட்சியில் இணைந்த பரேஷ் சந்திர அதிகாரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பார்த்தா பிரதிம் ரேவை பாஜகவுக்கு இழுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடகக் கலைஞர்களுக்கும், மற்ற கட்சிகளில் இருந்து இடம் மாறியவர்களுக்குமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக திரிணமூல் கட்சியினர் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
 இதே நிலை தொடர்ந்தால், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், அதன் தலைவர் மம்தா பானர்ஜிக்கும் பின்னடைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com