லோக்பால் ஆணையத் தலைவர் நீதிபதி பினாகி சந்திர கோஷ்: ஜனாதிபதி அறிவிப்பு 

லோக்பால் ஆணையத்தின் முதல் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்படுவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.
லோக்பால் ஆணையத் தலைவர் நீதிபதி பினாகி சந்திர கோஷ்: ஜனாதிபதி அறிவிப்பு 

புது தில்லி: லோக்பால் ஆணையத்தின் முதல் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்படுவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

உயர் பதவியில் இருப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக, மத்தியில் லோக்பால் அமைப்பையும், மாநிலங்களில் லோக் ஆயுக்த அமைப்பையும் ஏற்படுத்துவதற்கான சட்டம், நாடாளுமன்றத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

லோக்பால் நியமன விதிகள்:

லோக்பால் அமைப்பின் தலைவராக நியமிக்கப்படுபவர், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவோ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ இருந்திருக்க வேண்டும். லோக்பால் ஆணையத்தில் 8 உறுப்பினர்கள் வரை இடம்பெறலாம். அதில் 4 உறுப்பினர்கள் நீதித்துறையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதம் பேராவது பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் அல்லது 70 வயது வரையில் ஆகும். லோக்பால் தலைவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இணையான ஊதியம் வழங்கப்படும்.  லோக்பால் உறுப்பினருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிக்கு இணையான ஊதியம் வழங்கப்படும்.

லோக்பால் ஆணையத் தலைவரை நியமிப்பது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான லோக்பால் தேர்வுக் குழுவினர் இறுதிகட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று சமீபத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற லோக்பால் தேர்வுக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபெறுமாறு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை காங்கிரஸ் மக்களவை கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நிராகரித்தார். அதே சமயம், லோக்பால் ஆணையத் தலைவர் நியமிக்கப்பட்டால் அதுகுறித்து காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்புகளை தெரிவிக்கும் எனத் தெரிகிறது.

லோக்பால் அமைப்பின் முதலாவது தலைவராக உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். எனினும், மத்திய அரசு சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் லோக்பால் ஆணையத்தின் முதல் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்படுவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பினாகி சந்திர கோஷ் (66) கடந்த 2017-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றவர். அதற்குப் பிறகு, அதே ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி முதல் மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக நீடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com