தில்லி காங்கிரஸ் செயல் தலைவர்களுடன் அவசர கூட்டம்: ஷீலா தீட்சித் அழைப்பு

​தில்லி காங்கிரஸ் செயல் தலைவர்கள் 3 பேருடன் ஆலோசனை நடத்துவதற்காக அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் அழைப்பு விடுத்துள்ளார். 
தில்லி காங்கிரஸ் செயல் தலைவர்களுடன் அவசர கூட்டம்: ஷீலா தீட்சித் அழைப்பு



தில்லி காங்கிரஸ் செயல் தலைவர்கள் 3 பேருடன் ஆலோசனை நடத்துவதற்காக அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் அழைப்பு விடுத்துள்ளார். 

மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளன. ஆனால், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தில்லியில் எதிரும் புதிருமாக இருப்பதால் அங்கு இரு கட்சிகளுக்கிடையிலான கூட்டணி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. 

ஆனால், தில்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைப்பதை தில்லி காங்கிரஸ் நிர்வாகிகள் விரும்பவில்லை என்று தில்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, தில்லி காங்கிரஸ் நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று தில்லியில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாகவும், ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதனிடையே, தில்லியில் ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டால் அது பாஜகவுக்கே சாதகமாக அமைந்துவிடும் என்று அரவிந்த் கேஜரிவால் தெரிவித்திருந்தார். 

எனினும், தில்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து காங்கிரஸ் தற்போது மீண்டும் சிந்தித்து வரும் நிலையில், இந்த அவசர கூட்டத்துக்கு ஷீலா தீட்சித் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, அக்கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவிக்கையில், "ஷீலா தீட்சித் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் 3 செயல் தலைவர்களான தேவேந்தர் யாதவ், ஹரூன் யூசுப் மற்றும் ராஜேஷ் லிலோதியாவுடனான அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என்றார். எனினும், இந்த அவசர கூட்டத்தின் நோக்கம் குறித்து அவர் எதுவும் பகிரவில்லை. 

முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் சாக்கோ, தில்லி மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்பின் போது, ஆம் ஆத்மி உடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் இறுதி முடிவு எடுப்பார் என்று தெரிவித்தார். இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு ஷீலா தீட்சித் கடிதம் எழுதியிருந்தார். அதில், ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com