கோவா ஆளுநருடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சந்திப்பு: ஆட்சியமைக்க உரிமை கோரினர்

கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹாவை திங்கள்கிழமை சந்தித்த காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஆட்சியமைக்க உரிமை கோரினர்.


கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹாவை திங்கள்கிழமை சந்தித்த காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஆட்சியமைக்க உரிமை கோரினர்.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் ஞாயிற்றுக்கிழமை காலமானதைத் தொடர்ந்து, மாநில அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் உள்ளிட்ட காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 14 பேர் அடங்கிய குழு, கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹாவை தலைநகர் பனாஜியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்தனர். அப்போது, மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை ஆளுநரிடம் அவர்கள் வழங்கினர்.
இது குறித்து, சந்திரகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைந்தது, பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் விளங்குவது குறித்து ஆளுநருடன் எடுத்துரைத்தோம். ஆளுநர் அதனை ஒப்புக்கொண்டார். இந்த விவகாரம் குறித்து விரைவில் தொடர்புகொள்வதாக அவர் எங்களிடம் உறுதி அளித்தார் என்றார் அவர்.
செயற்கைப் பெரும்பான்மை: இதனிடையே, மாநிலத்தில் செயற்கையான பெரும்பான்மையை பாஜக உருவாக்கி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டினார். இது குறித்து, தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க காங்கிரஸ் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதனை நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிவிக்க காங்கிரஸ் விரும்புகிறது. மாநில ஆளுநர்கள் சரியான முடிவுகளையே எடுக்க வேண்டும். சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருக்கும் கட்சிக்கே, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும். மத்திய அரசின் ஆலோசனையின்படி, மாநிலத்தில் செயற்கைப் பெரும்பான்மையை உருவாக்கினால், அது ஜனநாயகத்துக்குச் சரியாக இருக்காது.
மாநில ஆளுநர், மாநில நன்மைக்காக மட்டுமே பணிபுரிய வேண்டும். குறிப்பிட்ட கட்சிக்காகப் பணிபுரியக் கூடாது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ் கட்சியை, ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. அப்போது செய்ய முயற்சித்ததையே, தற்போதும் காங்கிரஸ் முயற்சிக்கிறது. பாஜகவுக்கு 11 எம்எல்ஏக்களே உள்ளனர். ஆனால், காங்கிரஸிடம் 14 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களை விட 3 உறுப்பினர்களை நாங்கள் அதிகமாகப் பெற்றுள்ளோம்.
இவை தவிர பேரவைத் தலைவர் ஒருவர், கோவா பார்வர்டு கட்சியின் 3 உறுப்பினர்கள், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் 3 உறுப்பினர்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒருவர், 3 சுயேச்சைகள் ஆகியோர் பேரவையில் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com