கோவா புதிய முதல்வர் பிரமோத் சாவந்த்

பாஜகவைச் சேர்ந்த பிரமோத் சாவந்த், கோவாவின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்பார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கோவா புதிய முதல்வர் பிரமோத் சாவந்த்


பாஜகவைச் சேர்ந்த பிரமோத் சாவந்த், கோவாவின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்பார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணையப் புற்றுநோயால் மரணமடைந்ததை அடுத்து, அந்த மாநிலத்துக்கு புதிய முதல்வரைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பிரமோத் சாவந்த் இப்போது கோவா சட்டப் பேரவைத் தலைவராக உள்ளார். அவருடன் கோவா பார்வர்டு கட்சியின் விஜய் சர்தேசாய், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி எம்எல்ஏ சுதின் தவாலிங்கர் ஆகியோர் துணை முதல்வராகப் பொறுப்பேற்பார்கள் என்றும் தெரிகிறது. கோவாவில் பாஜகவுக்கு சட்டப்பேரவையில் முழுபலம் இல்லாததால் கூட்டணி ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. எனவே, கூட்டணிக் கட்சிகளுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இரு கூட்டணிக் கட்சிகளுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படுகிறது. பாரிக்கர் முதல்வராக இருந்தபோது துணை முதல்வர்கள் யாரும் இருந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவா பார்வர்டு, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகியவற்றின் தலா 3 எம்எல்ஏக்கள் மற்றும் மூன்று சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன்தான் பாஜக ஆட்சியில் உள்ளது.
இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், கோவாவின் புதிய முதல்வர் குறித்து பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுடன் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது என்றார். எனினும், அடுத்த முதல்வர் பிரமோத் சாவந்த் என்பதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும், கோவா பாஜக வட்டாரங்கள் பிரமோத் சாவந்த் புதிய முதல்வர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
மொத்தம் 40 எம்எல்ஏக்களைக் கொண்ட கோவா பேரவையில், காங்கிரஸ் கட்சி 14 எம்எல்ஏக்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. எனினும், 12 எம்எல்ஏக்களைக் கொண்ட பாஜக சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சியில் உள்ளது. அங்கு ஏற்கெனவே 3 எம்எல்ஏ இடங்கள் காலியாக இருந்த நிலையில் இப்போது பாரிக்கரின் மறைவை அடுத்து 36 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com