சம்ஜெளதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் மனு மீது 20-ஆம் தேதி உத்தரவு

சம்ஜெளதா விரைவு ரயில் குண்டு வெடிப்பு வழக்கில், சாட்சிகளை விசாரிக்கக் கோரி பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் தாக்கல் செய்த மனு மீது தில்லி சிறப்பு நீதிமன்றம், வரும் புதன்கிழமை உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.


சம்ஜெளதா விரைவு ரயில் குண்டு வெடிப்பு வழக்கில், சாட்சிகளை விசாரிக்கக் கோரி பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் தாக்கல் செய்த மனு மீது தில்லி சிறப்பு நீதிமன்றம், வரும் புதன்கிழமை உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.
தில்லியில் இருந்து பாகிஸ்தானின் லாகூருக்கு வாரம் இருமுறை இயக்கப்படும் சம்ஜௌதா விரைவு ரயிலில், கடந்த 2007, பிப்ரவரி 18-ஆம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இரு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. 
ஹரியாணாவின் பானிபட் அருகே நிகழ்ந்த இச்சம்பவத்தில், 68 பேர் பலியாயினர். அவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.
இந்த வழக்கை விசாரித்து வந்த பஞ்ச்குவலாவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம், இறுதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், மார்ச் 11-ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக இருந்தது.
இதனிடையே, குண்டு வெடிப்பில் உயிரிழந்த பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது வகீலின் மகள் ரஹீலா வகீல்,  என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், குண்டு வெடிப்பை நேரில் பார்த்த பாகிஸ்தானியர்களிடம் முழுமையாக விசாரணை நடத்தப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு சம்மன் அனுப்பப்படவில்லை என்றும், விசா வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த மனு, சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகதீப் சிங் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் இறுதிவாதங்கள் முடிவடைந்து, தீர்ப்பு அறிவிக்கப்படும் நேரத்தில் மனு தாக்கல் செய்திருப்பது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்த 13 சாட்சிகளும் வாக்குமூலம் அளிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறிய அவர், மனு மீதான உத்தரவை வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
முன்னதாக, சம்ஜெளதா குண்டு வெடிப்பு வழக்கை, ஹரியாணா மாநில காவல் துறை முதலில் வழக்குப்பதிவு செய்தது. பின்னர் இந்த வழக்கு, தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வசம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த என்ஐஏ அமைப்பு, கடந்த 2011-ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், 8 பேருக்கு எதிராகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
அவர்களில், சுவாமி அஸீமானந்த் உள்ளிட்ட நால்வர், வழக்கு விசாரணைக்காக, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இவர்களில், சுவாமி அஸீமானந்த் பிணையில் வெளியே உள்ளார். மற்ற மூவரும் சிறையில் உள்ளனர்.
முன்னதாக, அதைத் தொடர்ந்து, வெடிகுண்டு தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய, சுனில் ஜோஷி என்பவர், மத்தியப் பிரதேச மாநிலம், தீவாஸ் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டருகே கடந்த 2007 டிசம்பரில் சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட மற்ற மூவர், தலைமறைவாகி விட்டனர்.
இந்தியாவில் உள்ள ஹிந்து கோயில்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்குவதற்காக, சம்ஜெளதா விரைவு ரயிலில் குண்டு வைக்க அவர்கள் சதித் திட்டம் தீட்டியதாக தேசியப் புலனாய்வு அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com