பாஜகவுக்கு எதிரான கூட்டணி தேர்தலுக்கு பிறகும் அமையலாம்: ராஜஸ்தான் முதல்வர்

பாஜகவுக்கு எதிரான கூட்டணி தேர்தலுக்கு முன் அமையாவிட்டாலும், தேர்தலுக்கு பிறகும் அமையலாம் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 
பாஜகவுக்கு எதிரான கூட்டணி தேர்தலுக்கு பிறகும் அமையலாம்: ராஜஸ்தான் முதல்வர்


பாஜகவுக்கு எதிரான கூட்டணி தேர்தலுக்கு முன் அமையாவிட்டாலும், தேர்தலுக்கு பிறகும் அமையலாம் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணியை அமைத்துள்ளனர். தமிழகத்தில் திமுக, ஆந்திராவில் தெலுங்கு தேசம், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் என பிராந்தியக் கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து பலம் சேர்த்து வருகிறது.

எனினும், தில்லியில் ஆம் ஆத்மியுடனும், உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜவாதி ஆகிய கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க முடியவில்லை. தில்லியில் ஆம் ஆத்மி கட்சியே கூட்டணிக்கு ஒத்துழைத்த போதும், தில்லி காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் பிஹாரில் கூட்டணி அமைக்க முடியவில்லை. மேற்கு வங்கத்தில் இடதுசாரி முன்னணியுடனும் காங்கிரஸ் கட்சியால் கூட்டணி அமைக்கமுடியவில்லை.    

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் சமாஜவாதி 37 மக்களவைத் தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிக்கு 1 தொகுதி, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு தலா 1 தொகுதி என மூன்று தொகுதிகளில் இந்த கூட்டணி போட்டியிடவில்லை.

இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, பாஜகவுக்கு எதிரான கூட்டணி தேர்தலுக்கு பிறகும் அமையலாம் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார். 

இதுதொடர்பாக, அவர் மேலும் பேசியதாவது,  

"பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடவே விரும்புகிறது. மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தான் காங்கிரஸ் போட்டியிடும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தெளிவாக தெரிவித்துவிட்டார். 

பாஜகவிடம் ஏராளமான வளங்கள் உள்ளது. ஆட்சியை கைப்பற்றுவதற்காக பண பலத்தையும், கைவசம் உள்ள வளங்களையும் பாஜக தவறாக பயன்படுத்தும். 
அதேசமயம், காங்கிரஸ் தேசிய கட்சி என்பதால் அதற்கு நிர்பந்தங்கள் உள்ளன. காங்கிரஸ் கட்சி சரியான முறையில் கூட்டணி அமைக்காவிட்டால், கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் நிர்வாகிகளும் இணையமாட்டார்கள். பிறகு கூட்டணி அமைத்து என்ன பயன்?    

பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜவாதி கட்சிகள் சொந்த நிர்பந்தங்கள் காரணமாக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கவில்லை. எனினும், தேர்தலுக்கு முந்தைய அல்லது பிந்தைய கூட்டணி அமையும். அதற்கான அழுத்தம் மக்களிடம் இருந்து வரும்.    

காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை பெறுவதற்காகவே பகுஜன் சமாஜ், சமாஜவாதி மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அவர்கள் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை கொண்டு அரசியல் செய்கின்றனர். அவர்கள் தங்களது சொந்த நலன்களையே கருத்தில் கொண்டுள்ளனர்.    

ஆனால், நேரம் வரும்போது இந்த கட்சிகள் நாட்டு நலனை கருதி கூட்டணி அமைக்கும். எது நடந்தாலும் மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வராது என்று நான் நம்புகிறேன். பாஜகவுக்கு எதிரான கட்சிகள் தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்காவிடிலும் தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமையும்.  

நாட்டில் ஜனநாயகம் அபாய நிலையில் உள்ளது. இங்கு பேச்சுரிமையே இல்லை. அரசுக்கு எதிராக யாரேனும் எதுவும் பேசினால் தேச துரோகி என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். 

இளைஞர்கள் மத்தியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதுபோன்ற தவறான தகவல்களை பகிர்வதன் மூலம் அவர்கள் பாவம் இழைக்கின்றனர்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com