நீரவ் மோடி ஜாமீன் மனு நிராகரிப்பு: 29-ஆம் தேதி ஆஜர்படுத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு 

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ள நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம் நிராகரித்தது. 
நீரவ் மோடி ஜாமீன் மனு நிராகரிப்பு: 29-ஆம் தேதி ஆஜர்படுத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு 


பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ள நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம் நிராகரித்தது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் மோசடி செய்துவிட்டு பிரிட்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர் நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவர் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

அப்போது, தனக்கு ஜாமீன் வழங்கும்படி இந்திய மதிப்பில் ரூ. 4.50 கோடி அளவிலான பிணை பத்திரத்தை தாக்கல் செய்வதாக நீரவ் மோடி தெரிவித்தார். ஆனால், இந்த ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம் அவரை மீண்டும் 29-ஆம் தேதி ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.   

அவரை நாடு கடத்துவது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு, அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட வாய்ப்பு உள்ளது.

வழக்கு விவரம்: 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர், கடந்த ஆண்டு வெளிநாட்டுக்குத் தப்பினர். 

இதையடுத்து, பிரிட்டன் தலைநகர் லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக உலவி வருவதாக அந்நாட்டின் நாளிதழ் ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டது. அதில், லண்டனில் சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பில் நீரவ் மோடி வசித்து வருகிறார்; புதிதாக வைர வியாபாரத்திலும் அவர் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், நீரவ் மோடியின் தற்போதைய புகைப்படங்களும் வெளியாகி இருந்தன. இது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்று, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், நீரவ் மோடிக்கு எதிராக கைது ஆணையைப் பிறப்பித்தது. இந்தக் கைது ஆணை சில நாள்களுக்கு முன்பே பிறப்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் நேற்று முன்தினம் தான் அமலாக்கத் துறைக்கு கிடைத்தது. 

இந்தியாவில் இதேபோன்ற கடன் மோசடியில் ஈடுபட்டு பிரிட்டனுக்குத் தப்பியோடிய மற்றொரு தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் தொழிலதிபர் நீரவ் மோடி அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் பெற்று முறைகேடு செய்தது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்டவை விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள அவர்களது பல்வேறு சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com