பாஜக தலைவர்கள் 'போலி ஹிந்துக்கள்', நான் தான் 'நிஜ ஹிந்து'- சந்திரசேகர ராவ் பிரகடணம்

பாஜக தலைவர் அனைவரும் போலி ஹிந்துக்கள் எனவும் தான் மட்டுமே நிஜ ஹிந்து என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சுயப்பிரகடணம் செய்துகொண்டுள்ளார். 
பாஜக தலைவர்கள் 'போலி ஹிந்துக்கள்', நான் தான் 'நிஜ ஹிந்து'- சந்திரசேகர ராவ் பிரகடணம்

பாஜக தலைவர் அனைவரும் போலி ஹிந்துக்கள் எனவும் தான் மட்டுமே நிஜ ஹிந்து என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சுயப்பிரகடணம் செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் கூறியதாவது:

பாஜக-வினர் போலி ஹிந்துக்கள் மற்றும் அரசியல் ஹிந்துக்கள், ஆனால் நாங்கள் மட்டும் தான் உண்மையான ஹிந்துக்கள். ராமஜென்பூமி எங்கிருக்க வேண்டும் என்பதை அரசியல் கட்சிகள் முடிவெடுக்கக்கூடாது. பாஜக வந்த பிறகு தான் நாமெல்லாம் கோயில்களுக்கு செல்கிறோமா? அனைவரையும் மதிக்க வேண்டும் என்பதுதான் ஹிந்து மதத்தின் கோட்பாடு. பாஜக சுமார் 15 முதல் 20 குழுக்களை அமைத்து என்மீது அவதூறு பரப்பி வருகின்றனர். 

கடந்த 73 ஆண்டுகளாகவே மத்திய அரசுகள் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை நிராகரித்து வருகிறது. பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் போச்சுகளை மக்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். காங்கரிஸ் 65 ஆண்டுகளும், பாஜக 11 ஆண்டுகளும் இந்நாட்டை ஆட்சி செய்துள்ளது. காங்கிரஸ் மட்டும் ஒழுங்காக ஆட்சி செய்திருந்தால் இந்தியா மேம்பட்ட வளர்ச்சியை சந்தித்திருக்கும். நாட்டிலேயே விவசாயிகளுக்கு 24 மணிநேரங்களும் இலவச மின்சாரம் வழங்கப்படுவது தெலங்கானாவில் மட்டும்தான். 

ஒருவேளை காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நேரு, ராஜீவ் மற்றும் இந்திரா பெயர்களில் திட்டங்களை மட்டும் தான் ஏற்படுத்துவார்கள். பாஜக ஆட்சியமைத்தால் தீனதயாள உபாத்யா, ஷியாம் பிரசாத் முகர்ஜி ஆகியோரது பெயர்களில் ஏற்படுத்துவார்கள். இதுபோன்ற திட்டங்களால் நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. நாடு முழுவதும் 3 லட்சம் மெகாவாட் மின்சார உற்பத்தி இருந்தும் பாதிக்கும் மேற்பட்ட பகுதி இருளில்தான் மூழ்கியுள்ளது. இதனை கூட சரியாக பயன்படுத்த தெரியாத கட்சிகள் தான் காங்கிரஸும், பாஜகவும் என்று சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com