அத்வானி இடத்தில் அமித்ஷா: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் அத்வானி பெயர் இடம்பெறவில்லை

பாஜக மூத்த தலைவர் அத்வானி போட்டியிடும் குஜராத் காந்திநகர் தொகுதியில் இந்த முறை அமித்ஷா போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது. 
அத்வானி இடத்தில் அமித்ஷா: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் அத்வானி பெயர் இடம்பெறவில்லை


பாஜக மூத்த தலைவர் அத்வானி போட்டியிடும் குஜராத் காந்திநகர் தொகுதியில் இந்த முறை அமித்ஷா போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது. 

17-ஆவது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அமைச்சர் ஜேபி நட்டா இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டார். முதல்கட்டமாக 182 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

அதன்படி, பிரதமர் மோடி மீண்டும் வாராணசி தொகுதியிலேயே போட்டியிடுகிறார். குஜராத் காந்திநகர் தொகுதியில் இந்த முறை பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா போட்டியிடுகிறார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னௌ தொகுதியிலும், நாக்பூர் தொகுதியில் நிதின் கட்கரியும் போட்டியிடுகின்றனர். ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் ஸ்மிருதி ராணி போட்டியிடுகிறார். 

இந்த அறிவிப்பில் காந்திநகர் தொகுதியில் அமித்ஷா போட்டியிடுவது கவனம் பெற்றுள்ளது. காரணம், காந்திநகர் தொகுதி பாஜக மூத்த தலைவர் அத்வானி போட்டியிடும் தொகுதியாகும். அவர் 1991 முதல் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார் (1996-ஆம் ஆண்டு தவிர்த்து). 

ஆனால், 91 வயதான அத்வானிக்கு இந்த முறை காந்திநகர் தொகுதி ஒதுக்கப்படவில்லை. மேலும், முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெறவில்லை. 

மோடி-அமித்ஷா பாஜக தலைமைக்கு வந்த பிறகு கட்சிக்குள் அத்வானியின் ஆதிக்கம் சற்று குறைந்தது. அதேசமயம், மோடி-அமித்ஷா தலைமை 75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவதையும் தவிர்த்து வந்தது. இந்நிலையில், இந்த வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதனால், அத்வானியின் தேர்தல் அரசியல் உத்தேசமாக முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com