கோவா: நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி

கோவாவில் புதிய முதல்வரான பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு, சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
கோவா: நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி


கோவாவில் புதிய முதல்வரான பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு, சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
முன்னதாக, மறைந்த முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கோவா மாநில முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். அதைத்தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவராக இருந்த பிரமோத் சாவந்த், தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் புதிய முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், புதிய அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் வகையில், சிறப்புக் கூட்டத்தொடரை ஆளுநர் மிருதுளா சின்ஹா புதன்கிழமை கூட்டினார். அவையின் துணைத் தலைவர் மைக்கேல் லோபோ, அவை நடவடிக்கைகளை முன்னெடுத்தார். 
அப்போது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் அரசை ஆதரித்து 20 உறுப்பினர்கள் வாக்களித்தனர். பாஜக எம்எல்ஏக்கள் 11 பேரும், அதன் கட்சிகளான கோவா முன்னணி கட்சி மற்றும் எம்ஜிபி ஆகியவற்றின் தலா 3 உறுப்பினர்கள், 3 சுயேட்சைகள் ஆகியோர் அரசை ஆதரித்து வாக்களித்தவர்கள் ஆவர்.
காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 14 பேரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும் அரசை எதிர்த்து வாக்களித்தனர். 
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதல்வர் பிரமோத் சாவந்த் பேசுகையில், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் வளர்ச்சி நடவடிக்கைகள் சென்று சேருவதற்கு அனைத்து உறுப்பினர்களும் அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பாரிக்கருக்கு இரங்கல்: முன்னதாக, மறைந்த முதல்வர் பாரிக்கர், அவருக்கு முன்பு மறைந்த பாஜக எம்எல்ஏ பிரான்சிஸ் டி செளசா,  முன்னாள் அவைத்துணைத்தலைவர் விஷ்ணு வாக் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிப்பதற்கான தீர்மானத்தை பாஜக உறுப்பினர் ராஜேஷ் பட்னேகர் கொண்டு வந்தார். 
அந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி பாரிக்கரின் சேவைகளைப் பாராட்டியதுடன், அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் பிரமோத் சாவந்த் பேசுகையில், தன்னை அரசியலில் மேம்படுத்தியதில் பாரிக்கரின் பங்களிப்பு குறித்து உணர்ச்சிபூர்வமாகக் குறிப்பிட்டார்.  இன்றைக்கு நான் ஒரு எம்எல்ஏ-வாக இருக்கிறேன் என்றால், இந்த முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கின்றேன் என்றால், அதற்காக பாரிக்கருக்கு தலைவணங்க வேண்டும் என்றார் அவர்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் பேசுகையில், நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக உயர்ந்ததன் மூலமாக கோவா மாநிலத்தை பெருமைக்குள்ளாக்கியவர் பாரிக்கர் என்று தெரிவித்தார். சுயேட்சை எம்எல்ஏ ரோஹன் காந்தே பேசும்போது, கோவா நவீனமயமாக்கலின் தந்தை பாரிக்கர் என்று புகழாரம் சூட்டினார். 
இறுதியாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது அவைத் துணைத்தலைவர் மைக்கேல் லோபோ பேசுகையில், தொலைநோக்குப் பார்வையுடைய பாரிக்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வார்த்தைகள் போதாது என்றார்.
கணைய அழற்சி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கர், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com