சம்ஜெளதா குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து அஸீமானந்தா, 3 பேர் விடுவிப்பு

சம்ஜெளதா விரைவு ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சுவாமி அஸீமானந்தா உள்ளிட்ட 4 பேரை விடுவித்து சிறப்பு நீதிமன்றம்
சம்ஜெளதா குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி,  ஹரியாணா மாநிலம், பஞ்ச்குலாவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்துக்கு பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட சுவாமி அஸீமானந்த்
சம்ஜெளதா குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி,  ஹரியாணா மாநிலம், பஞ்ச்குலாவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்துக்கு பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட சுவாமி அஸீமானந்த்


சம்ஜெளதா விரைவு ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சுவாமி அஸீமானந்தா உள்ளிட்ட 4 பேரை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுகுறித்து, தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) வழக்குரைஞர் ராஜன் மல்ஹோத்ரா கூறியதாவது:
சம்ஜெளதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சுவாமி அஸீமானந்தா, லோகேஷ் சர்மா, கமல் செளஹான், ராஜிந்தர் செளத்ரி ஆகிய நான்கு பேரையும் விடுவித்து பஞ்ச்குலா என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெகதீப் சிங் தீர்ப்பளித்துள்ளார்.
அதற்கு முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் பெண் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார் என்றார் அவர்.
தில்லி மற்றும் பாகிஸ்தானின் லாகூர் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் சம்ஜெளதா அதிவிரைவு ரயிலில் கடந்த 2007-ஆண்டு நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் இரு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. 
ஹரியாணாவின் பானிபட் அருகே நிகழ்ந்த இச்சம்பவத்தில், 68 பேர் பலியாயினர். அவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இந்த வழக்கை விசாரித்து வந்த ஹரியாணா மாநிலம், பஞ்ச்குலாவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம், இறுதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், மார்ச் 11-ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக இருந்தது.
இதனிடையே, குண்டு வெடிப்பில் உயிரிழந்த பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது வகீலின் மகள் ரஹீலா வகீல்,  என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், குண்டு வெடிப்பை நேரில் பார்த்த பாகிஸ்தானியர்களிடம் முழுமையாக விசாரணை நடத்தப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு சம்மன் அனுப்பப்படவில்லை என்றும், விசா வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
அதையடுத்து, வழக்கின் தீர்ப்பு புதன்கிழமை வரை தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில்,  சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகதீப் சிங் தற்போது இவ்வாறு தீர்ப்பளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com